எப்-16 போர் விமானம் நவீனமயம்; பாக்.கிற்கு உதவி செய்வது இந்தியாவை மிரட்ட அல்ல: அமெரிக்கா விளக்கம்

வாஷிங்டன்: `பாகிஸ்தானுக்கு எப்-16 போர் விமானங்களை நவீனமயமாக்க உதவி செய்வது, இந்தியாவை மிரட்டுவதற்காக அல்ல,’ என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு பல ஆண்டுகளுக்கு முன் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக என்று அதிநவீன எப்-16 போர் விமானங்களை அமெரிக்கா அளித்தது. அந்த காலக்கட்டத்தில் பாகிஸ்தானும் அமெரிக்காவும் நெருக்கமான நட்பை கொண்டிருந்தன. ஆனால், தற்போது சீனாவின் பக்கம் பாகிஸ்தான் சாய்ந்து விட்டதால், இந்தியா உடனான உறவை அமெரிக்கா பலப்படுத்தி இருக்கிறது.

சர்வதேச வி ஷயங்களில் இருநாடுகளும் நெருங்கி செயல்படுகின்றன. அதேநேரம், பழைய உற்ற நண்பனான ரஷ்யாவுடனும் இந்தியா தொடர்ந்து நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறது. இது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில், பாகிஸ்தானின் எப்-16 போர் விமானங்களை ரூ3,600 கோடி செலவில் நவீனமயமாக்குவதற்கான உதவியை அமெரிக்கா திடீரென அறிவித்துள்ளது. ரஷ்யாவுடன் நெருங்கிய நட்பு கொள்ளும் இந்தியாவை எச்சரிக்கும் அல்லது மிரட்டும் வகையில் அமெரிக்கா இந்த உதவியை அறிவித்து இருப்பதாக கருதப்படுகிறது.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பாதுகாப்பு துறை இணையமைச்சர் எல்லி ராட்னர் நேற்று அளித்த பேட்டியில், `பாகிஸ்தானுக்கு எப்-16 போர் விமானங்களை நவீனமயமாக்கும் உதவி அறிவிக்கப்பட்டது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பானது. இந்தியா நினைப்பது போல், ரஷ்யா உடனான அதன் நட்புறவுக்கு எதிர்ப்பு தெரிவித்தோ, மிரட்டவோ அல்ல,’ என்று தெரிவித்தார்.

மோடிக்கு அமெரிக்காவும் பாராட்டு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின்போது ரஷ்ய அதிபர் புடினை சந்தித்த பிரதமர் மோடி, `இது போருக்கான நேரம் அல்ல; சுமூக பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும்,’ என உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி அறிவுரை வழங்கினார். மோடியின் இச்செயலுக்கு பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன. இந்நிலையில், அமெரிக்காவும் மோடியின் செயலை நேற்று பாராட்டியது.

Related Stories: