மதுரை எய்ம்ஸ் 95 சதவீதம் பணி முடிந்ததாக நான் சொல்லவில்லை: பாஜ தேசிய தலைவர் நட்டா பேட்டி

காரைக்குடி: பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார். முதல் நாள் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், 2வது நாளான நேற்று பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து கட்சி மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. நான் சொன்னதை எம்பிக்கள் தவறாக புரிந்து கொண்டு பிரசாரம் செய்கின்றனர்.

மதுரை எய்ம்ஸ்க்கு 95 சதவீதம் நிதி, கட்டமைப்பு பொருட்கள் ஒதுக்கியதாகத்தான் கூறினேன். ஆனால் 95 சதவீதம் பணிகள் முடிந்ததாக நான் சொல்லவில்லை. மோடி தமிழகத்திற்கு மிகுந்த ஆதரவு அளித்து வருகிறார். வளர்ச்சிக்கு தேவையான நிதியை அளித்து வருகிறார்’’ என்றார். முன்னதாக, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஜே.பி.நட்டா சாமி தரிசனம் செய்தார். திருப்புத்தூர் பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் அமைந்துள்ள நினைவுத்தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: