ஹிஜாபிற்கு எதிரான போராட்டம் தீவிரம் : ஈரானில் 31 பேர் பலி 1,000 பேர் கைது; தொடர் வன்முறையால் இணைய சேவை முடக்கம்

தெஹ்ரான்: ஈரானில் நடந்து வரும் ஹிஜாபிற்கு எதிரான போராட்டத்தால் 5 நாளில் 31 பேர் பலியாகி உள்ளனர். 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் வன்முறையால் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த 13ம் தேதி சரியாக ஹிஜாப் அணியாததற்காக மஹ்சா அமினி என்ற இளம்  பெண்ணை ஈரான் போலீசார் கைது செய்தனர். அந்தப் ெபண் அடுத்த மூன்று  நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இறந்தார். இதைத் தொடர்ந்து நாடு  முழுவதும் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடங்கியது.

ஹிஜாபிற்கு எதிராக நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க ஈரானிய பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்றைய நிலையில் 15 நகரங்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் பரவியுள்ளதால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க ஆங்காங்கே போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் ஈரானின் ெபரும்பாலான நகரங்களில் பதற்றம் நீடிக்கிறது.

இதுகுறித்து  ஈரான் மனித உரிமைகள் இயக்குநர் மஹ்மூத் எமிரி-மொகத்தம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஈரானில் ஹிஜாபிற்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடந்த 5 நாட்களில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். 1,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைதியான போராட்டங்களை ஒடுக்க ஆளும் அரசின் காவல்துறை தோட்டாக்களை பயன்படுத்துகிறது.

ஈரானின் வடக்கு மாகாணமான குர்திஸ்தானில் முதலில் தொடங்கிய ஆர்ப்பாட்டம், தற்போது படிப்படியாக நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் பரவியுள்ளது. காவல்துறைக்கு எதிராக, ஈரான் இளைஞர்கள் ‘கர்ஷத்’ என்ற செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த செயலியை கடந்த 5 நாட்களில் 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலி மூலம், இளைஞர்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். அதனால் தெஹ்ரானில் இணைய  சேவை முடக்கப்பட்டது. சமூகவலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ‘இன்ஸ்டா’ முடக்கம்

பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கம் உலகின் பல நாடுகளில் நேற்றிரவு திடீரென முடங்கியது. சமூக வலைதளங்களின் செயலிழப்புகளை கண்காணிக்கும் வலைத்தளம் ஒன்று வௌியிட்ட அறிக்கையில், ‘மெட்டா சமூக வலைதளத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம் உலகின் பலநாடுகளில் முடங்கியது. சுமார் 19,000 பயனர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை தெரிவித்தனர். அதேபோல் இன்ஸ்டா ஃபீட் மற்றும் ரீல் பகுதிகளும் முடங்கின. செய்திகள், அப்டேட்கள் எதுவும் வெளியாகவில்லை. இன்ஸ்டாகிராமை பொருத்தமட்டில் 66 சதவீதம் அதன் பயன்பாட்டு செயலிழப்புகளுக்காகவும், 24 சதவீதம் சர்வர் இணைப்பு பிரச்னைகளுக்காகவும், மீதமுள்ள 10 சதவிகிதம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்நுழைவது தொடர்பான பிரச்னைகளையும் பயனர்கள் சந்தித்தனர். சில மணி நேரங்களுக்கு பின்னர் மீண்டும் இன்ஸ்டாகிராம் செயல்பாட்டுக்கு வந்தது.

Related Stories: