இந்தியா, உக்ரைன் நிரந்தர உறுப்பினர்களாக இல்லாதது ஏன்?: ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் கேள்வி

வாஷிங்டன்: இந்தியா, பிரேசில், உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஏன் நிரந்தர உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்படவில்லை என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கேள்வி எழுப்பியுள்ளார். ஐ.நா. பொதுச்சபையின் விவாதத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் பதிவு செய்யப்பட்ட காணொளி நேற்று முன்தினம் ஒளிபரப்பட்டது. அப்போது இந்தியா, ஜப்பான், தனது சொந்த நாடான உக்ரைன் மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் ஏன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இல்லை என்று கேள்வி எழுப்பினார். இந்த பிரச்சனை நிரந்தரமாக தீர்க்கப்படும் நாள் விரைவில் வரும் என்றும் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தங்கள் செய்வது பற்றி நிறைய முறை பேசப்பட்டதாக கூறிய உக்ரைன் அதிபர் அவையின் முடிவுகளே எட்டப்படாமல் முடிந்து விட்டதாகவும் விமர்சனம் செய்தார். தற்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. தற்கால உலக எதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.  

Related Stories: