ரஷ்யா, உக்ரைன் போரை நிறுத்தி, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

வாஷிங்டன்: ரஷ்யா, உக்ரைன் நாடுகள் உடனடியாக சண்டையை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தை மற்றும் தூதரகம் நடவடிக்கைகளுக்கு திரும்ப வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தி உள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் ரஷ்யா, உக்ரைன் போரால் ஏற்பட்டிருக்கு தாக்கம் பற்றி பேசினார். உக்ரைன் மோதலுக்கான பாதையானது ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் கவலை அளிப்பதாகவும், போரின் விளைவுகள் மிக வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

உலகமயமாக்கல் காரணமாக தொலைதூரத்தில் போரின் தாக்கத்தை உணரமுடிவதாக கூறிய அமைச்சர் ஜெய் சங்கர் இந்த போரால் உணவு பொருள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், விலைவாசி கடுமையாக அதிகரித்திருப்பதாக கூறினார். எனவே, இரு நாடுகளும் பகையை மறந்து பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்றும், பிரதமர் மோடி கூறியதை போல இது போருக்கான சகாப்தமாக இருக்க முடியாது என வலியுறுத்தினார். பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிப்பது தொடர்பான முன்வடிவை ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கல் செய்ய முயலும் போது, சீனா தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அமைச்சர் ஜெய் சங்கர் கண்டனம் தெரிவித்தார்.

இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ரஷ்யாவுடன் நெருக்கமாக இருக்கும் நாடுகள் கூட உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவித்திருப்பதாக கூறினார். மேலும், உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தல் விடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகள் வலியுறுத்த கேட்டுக்கொண்டார். இதனிடையே, நாசி சர்வாதிகாரிகளை போல உக்ரைன் மனிதாபிமான நடைமுறைகளை காலில் போட்டு மிதித்து விட்டதாகவும், உக்ரைன் ராணுவம் அந்நாட்டு மக்களை கேடயமாக பயன்படுத்துவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

Related Stories: