×

ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தீப்பொறி பறக்க கத்தியை உரசி மிரட்டிய கல்லூரி மாணவர்கள்:பயணிகள் அதிர்ச்சி, வீடியோ வைரல்

பெரம்பூர்: ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தீப்பொறி பறக்க கத்தியை தேய்த்து, கல்லூரி மாணவர்கள் மிரட்டும் காட்சி வீடியோ வைரல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது, ரயில் பயணிகளை கடும் பீதி அடைய செய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், தினமும் பஸ், ரயில்களில் கல்லூரிக்கு வருகின்றனர். இவ்வாறு வருகின்றபோது தாங்கள் படிக்கும் கல்லூரிதான் கெத்து என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையில் தேவையில்லாத ரகளை மற்றும் பிரச்னையில் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பேருந்துகளில் ரூட் தல பிரச்னை தொடங்கி தற்போது ரயில்களிலும் பயணிகளுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.கடந்த சில மாதங்களுக்கு முன் 2 கல்லூரி மாணவர்கள், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே கற்களால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

அப்போது, இது சம்பந்தமாக கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ரயில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்லும் கல்லூரி மாணவன் ஒருவர், பிளாட்பாரத்தில் கத்தியை வைத்து தேய்த்தபடி செல்லும் காட்சி வீடியோவாக பதிவாகி வைரலாகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் ரயிலில் கல்லூரி மாணவர்கள் சிலர் பெரம்பூர் ரயில் நிலையத்தில் கூட்டமாக ஏறியுள்ளனர். பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டு செல்லும்போது லோகோ கேரேஜ், வில்லிவாக்கம், கொரட்டூர் என்று ஒவ்வொரு ரயில் நிலைய நடைபாதையிலும் வண்டி நிற்கும்போது ரயிலில் தொங்கியபடி பட்டா கத்தியை வைத்து ரகளையில் ஈடுபடுகிறார்கள்.

மேலும், பட்டா கத்தியை பிளாட்பாரத்தில் தேய்ப்பதுடன், பட்டா கத்தியை காட்டி பயணிகளை அச்சுறுத்தும் வகையிலும் செல்கிறார். இந்த காட்சிகளை அங்கிருந்து சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்தான் பட்டா கத்தியுடன் செல்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : College students threatened with knife to fly sparks on railway station platform: Passengers shocked, video goes viral
× RELATED ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கத்தியை...