×

அவசர கால கதவு உடைந்து பள்ளி வேனில் இருந்து கீழே விழுந்த சிறுமி படுகாயம்: தாம்பரத்தில் பரபரப்பு

சென்னை: தாம்பரத்தில் பள்ளி வேனில் அவசர கால கதவு உடைந்ததால், கீழே விழுந்த சிறுமி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் சேவியர், சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது மகள் ரியோனா (11), தாம்பரம் - முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு சொந்தமான வேனில் ரியோனா புறப்பட்டார். அவருடன் கிருஷ்ணா நகர், பாரதிநகர், பழைய பெருங்களத்தூர் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து அதே பள்ளியை சேர்ந்த சுமார் 31 மாணவ, மாணவிகள் பயணம் செய்துள்ளனர். ஓட்டுநர் வெங்கட்ராமன் வேனை ஓட்டியுள்ளார். பள்ளியின் அருகே வேன் சென்றபோது தாம்பரம் - முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்கியபோது, வேனின் அவசர கால கதவு உடைந்து, அருகே அமர்ந்திருந்த சிறுமி ரியோனா கீழே விழுந்தார்.

இதில் சிறுமியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு 4 பற்கள் உடைந்தன. இதனைகண்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிறுமி கீழே விழுந்ததைக் கண்ட வேன் ஓட்டுநர் வேனை சாலையிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால், அதற்குள் பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பள்ளி வேனின் அவசர கால கதவு உடைந்து சிறுமி கீழே விழுந்த போது பின்னால் எந்த வாகனமும் வரவில்லை. இதனால், சிறுமிக்கு உயிர் சேதம் ஏற்படாமல் காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவம் குறித்து பீர்க்கன்காரணை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ‘‘பள்ளி வாகனத்தை முறையாக பராமரிக்காததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் துவங்குவதற்கு முன்னர் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்து தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 2012படி முதல் உதவி பெட்டி இருக்கின்றதா, அவசரத்திற்கு வெளியேறும் ஜன்னல் சரியாக வேலை செய்கிறதா, பள்ளி வாகனம் என்பதற்கான அடையாளம் உள்ளதா, தீ அணைக்கும் கருவி உள்ளதா உள்பட்ட 17 பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு தகுதி சான்று வழங்க வேண்டும்.

வாகனங்களில் குறைகள் இருந்ததால் அதற்கு சான்று வழங்காமல் குறைகளை சரி செய்த பின்னர் மீண்டும் ஆய்வு செய்து தகுதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். ஆனால் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்வதில்லை. அலட்சியமாக செயல்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் முறையான ஆய்வு செய்யாமல் தகுதி சான்று வழங்கிய வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரி ஆகியோர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Girl falls from school van with broken emergency door, injured: Tambaram stirs
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...