
கேன்டர்பரி: இங்கிலாந்தை 2வது ஆட்டத்தில் வென்றதின் மூலம் 23 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா மகளிர் ஒருநாள் தொடரை இங்கிலாந்து மண்ணில் வென்று சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய மகளிர் அணி இப்போது 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, 1-0என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. கேன்டர்பரியில் நடந்த 2வது ஆட்டத்தில், முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 333ரன் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் பந்து வீசிய 5 வீராங்கனைகளும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
அடுத்து 334ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. இந்திய வீராங்கனைகள் 8 பேர் மாறி மாறி பந்து வீச, திணறிய இங்கிலாந்தின் ஆட்டம் 44.2ஓவருக்கு 245ரன்னில் முடிவுக்கு வந்தது. அதனால் இந்தியா 88 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இங்கிலாந்தின் வியட் 65, கேப்டன் ஆமி , ஆலீஸ் ஆகியோர் தலா 39ரன் எடுத்தனர். இந்திய தரப்பில் ரேணுகா சிங் 4, ஹேமா தயாளன் 2 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் தொடரையும் 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றுள்ளது. இங்கிலாந்தில் 1999ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த 2 அணிகளும் மோதும் 3வது மற்றும் கடைசி ஆட்டம் நாளை லண்டனில் நடக்கிறது.