அதிமுக கட்சி அலுவலக மோதல் விவகாரம் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் 69 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்: 15 நாட்களுக்கு கையெழுத்திட நிபந்தனை

சென்னை: அதிமுக கட்சி அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் 69 பேர் நேற்று சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அதிமுகவில்  ஒற்றைத் தலைமை தொடர்பாக ஜூலை 11ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்த அதே நேரத்தில்,அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பினர் மோதிக்கொண்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், அதிமுகஅலுவலக கலவரம் தொடர்பாக 69 பேர் முன்ஜாமின் கோரி வழக்கு தொடரப்பட்டது.  

இந்நிலையில், இவ்வழக்குத்தொடர்பாக உயர் நீதிமன்றம்ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 69 பேர் தினமும் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அனைவரும் 20 ஆயிரம் ரூபாய் அடையாறு கேன்சர் இன்ஸ்டியூட்டிற்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் முன் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் சிபிசிஐடி அலுவலகத்தில்  எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் காலை 10 மணி முதல் 12 மணி வரை கையெழுத்திடுவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது.

அதேபோல ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முன்ஜாமீன் பெற்ற அவரது ஆதரவாளர்களுக்குநேற்று  மதியம் 2-4 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மாவட்டச்செயலாளர்கள் ஆதிராஜாராம், விருகை ரவி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா, அசோக் குமார் உள்ளிட்ட 38 பேர் கையெழுத்திட்டனர். அவர்களை தொடர்ந்து முன்ஜாமீன் பெற்ற ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 25 பேர் கையெழுத்திட்டுச்சென்றனர். இவர்கள் அனைவரும் அடுத்த 15 நாள்களுக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

Related Stories: