×

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவி தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் சோதனை: என்ஐஏ அதிரடி; 100க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை: தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளித்தல், தீவிரவாத செயல்களை ஊக்குவித்தல், தடை செய்யப்பட்ட அமைப்புக்களில் சேருவதற்கு மக்களை மூளை சலவை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதல், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை ஊக்குவிப்பதற்கு நிதியுதவி, 2020 டெல்லி கலவரம், ஹத்ராஸ் தலித் பெண் கூட்டு பலாத்காரம் மற்றும் பல்வேறு சம்பவங்களுக்கு சதி திட்டம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ), அமலாக்கத்துறை அதிகாரிகள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும், பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி மற்றும் கேரளாவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் ஒன்றிய அமலாக்கத் துறையினர் பலமுறை பாப்புலர் பிரண்ட் அமைப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். சென்னை புரசைவாக்கத்தில் மாநில தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் என்ஐஏ எஸ்பி ஸ்ரீஜித் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை முதல், ஒன்றிய பாதுகாப்பு படையினர் உதவியுடன் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் சில ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

கோவை ஆத்துப்பாலம் அருகே கரும்பு கடை பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் (45) வீடு உள்ளது. நேற்று காலை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் 15 பேர் இவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். தகவல் அறிந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ மற்றும் பல்வேறு அமைப்பை சார்ந்தவர்கள் அங்கே குவிந்தனர். இஸ்மாயில் வீட்டிற்கு செல்ல முயன்ற அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவப்படையினர் அனுமதிக்கவில்லை. வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலர் கரும்புக்கடை மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட முயன்றனர். மேம்பாலம் கட்டுமான பணிக்கான இரும்பு பொருட்களை ரோட்டில் தூக்கி வீசினர். இதையடுத்து 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இஸ்மாயிலை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்காக விமானத்தில் டெல்லி அழைத்து சென்றனர். இவர் வீட்டில் இருந்த பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர். வெளிநாட்டு பண பரிவர்த்தனை, அமைப்பு ரீதியான பேச்சு தொடர்பாக இவரிடம் பல்வேறு தகவல்களை அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதை கண்டித்து கோவையில் ஒப்பணக்கார வீதி, சாயிபாபா காலனி, குறிச்சி, குனியமுத்தூர் பகுதியில் முஸ்லிம் அமைப்பை சார்ந்தவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசல் அதிகமானதால் மறியல் செய்தவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்தினர்.  

சாயிபாபா காலனி பகுதியில் மறியலுக்கு வந்தவர்களை போலீசார் விரட்டி சென்று கைது  செய்தனர். மறியல் போராட்டம் காரணமாக டவுன்ஹால் சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதியில் சில நிமிட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியல், முற்றுகையில் ஈடுபட்ட 106 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் மலப்புரத்தில் இருந்து பெங்களூரு சென்ற ரயில் கோவைக்கு வந்தபோது என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அதில் பயணித்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் கர்நாடக மாநில முன்னாள் தலைவரும், தேசிய பொறுப்பாளருமான முகமது ஷாகித் (56) என்பவரை பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்து சென்றனர். இந்தஅமைப்பிற்கு வந்த பணம் மற்றும் ஆட்சேபகரமான செயல்பாடு தொடர்பாக இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

மதுரை: மதுரையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் கோரிப்பாளையம், நெல்பேட்டை, சுங்கம்பள்ளிவாசல், வில்லாபுரம், யாகப்பாநகர் ஆகிய பகுதிகளில் உள்ளனர். இவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பின்னர் அந்த அமைப்பின் மாநில துணை தலைவரான வில்லாபுரத்தைச் சேர்ந்த ஹாலித், மதுரை மாவட்ட தலைவர் அபுதாஹிர், கோமதிபுரத்தைச் சேர்ந்த மாவட்ட பொதுச்செயலாளர் இஷாக், சிலைமான் புளியங்குளத்தைச் சேர்ந்த மண்டல பொறுப்பாளர் காஜா மைதீன், கோரிப்பாளையத்தைச் சேர்ந்த மதுரை மாவட்ட முன்னாள் தலைவர் இத்ரீஸ், நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்த தேசிய செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசுப் ஆகியோரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்ட சுமார் 25 பேரை ேபாலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் பேகம்பூர் முகமதியாபுரத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் என்ஐஏ அதிகாரிகள் 10 பேர் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், கம்பத்தில் தேசிய புலனாய்வுத்துறை எஸ்பி சுனில் தலைமையான அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மதுரை மண்டல செயலாளர் யாசர் அராபாத்தை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு மாவட்டத்தலைவர் பரக்கத்துல்லாவின் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து, விசாரணைக்காக சென்னை அழைத்து சென்றனர்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ஜாகீர்உசேன் நகரை சேர்ந்தவர் பயாஸ் அஹமது. எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர். நேற்று அதிகாலை 3 மணியளவில் என்ஐஏவை சேர்ந்த 11 பேர் அதிரடியாக இவரது வீட்டின் உள்ளே புகுந்து உள்பக்கமாக பூட்டு போட்டுவிட்டு, சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் பயாஸ் அஹமது மற்றும் அவரது சகோதரர் இம்தியாஸ் அஹமது (36) ஆகிய இருவரையும் அழைத்துச் சென்றனர். வீட்டில் இருந்த லேப்டாப், கம்ப்யூட்டர் பிரிண்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். தகவலறிந்த எஸ்டிபிஐ கட்சியினர் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜம்ஜம் நகர் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி, கல்லூரி வாகனங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போலீஸ் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பயாஸ் அகமதுவை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.  காரைக்கால் தோமாஸ் அருள் வீதியை சேர்ந்த புதுச்சேரி மாநில எஸ்.டி.பி.ஐ கட்சி துணைத்தலைவர் பிலால், காமராஜர் சாலையை சேர்ந்த குத்தூஸ், திருபட்டினம் பகுதியை சேர்ந்த கவ்ஸ் பகுருதீன் ஆகிய 3 பேர் வீட்டில் 10 பேர் கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர்.  இந்த சோதனைக்கு பின் 3 பேரையும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றனர். என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதை எதிர்த்து காரைக்கால் மஸ்தான் பள்ளி அருகில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு, கோட்டயம் பத்தனம்திட்டா, திருச்சூர், கண்ணூர் உள்பட கேரளாவில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகம் மற்றும் தலைவர்களின் வீடுகள் உள்பட 70 இடங்களில் என்ஐஏ எஸ்பி தர்மராஜ் தலைமையில் நேற்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். திருவனந்தபுரம் மணக்காடு பகுதியில் உள்ள மாவட்ட கமிட்டி அலுவலகம், மாவட்ட தலைவர் அஷ்ரப் மவுலவியின் திருவனந்தபுரம் பூந்துறையில் உள்ள வீடு, எர்ணாகுளத்தில் மாநில துணைத்தலைவர் அப்துல் ரகுமான், கோட்டயம் மாவட்ட தலைவர் சைனுதீன், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மாநில கமிட்டி உறுப்பினர் ரவுப்பின் கரிம்புள்ளி பகுதியில் உள்ள வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

மத்திய போலீசாரின் உதவியுடன் இந்த சோதனை நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் பாப்புலர் பிரண்ட் அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். திருவனந்தபுரத்தில் பாப்புலர் பிரண்ட் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. என்ஐஏ அதிகாரிகளின் வாகனத்தை தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த சோதனையில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் தேசிய தலைவர் சலாம், தேசிய பொதுசெயலாளர் நசருதீன் எளமரம், தேசிய துணை தலைவர் அப்துல் ரகுமான், மாநில தலைவர் முகமது பஷீர் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் நசருதீன் எளமரம் உட்பட 14 பேர் டெல்லி கொண்டு செல்லப்பட்டனர்.

கேரளாவில் கைது செய்யப்பட்டவர்களில் தமிழகத்தை சேர்ந்த முகமதலி ஜின்னா என்பவர் உட்பட 2 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரத்தில் 4 செல்போன்களும், பிட் நோட்டீஸ்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. அஷ்ரப் மௌலவி என்பவரது வீட்டில் இருந்து பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன. அதேபோல, கர்நாடகா உள்பட நாடு முழுவதும் 13 மாநிலங்களில் இருந்து 106 பேர் கைது செய்யப்பட்டனர். அதிகபட்சமாக கேரளாவில் 22 பேர் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிரா, கர்நாடகாவில் தலா 20 பேர், தமிழகத்தில் 10, அசாம் 9, உத்தரப்பிரதேசம் 8, ஆந்திரா 5, மத்தியப் பிரதேசம் 4, புதுச்சேரி மற்றும் டெல்லியில் தலா 3, ராஜஸ்தானில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த அமைப்பு 2006ம் ஆண்டு கேரளாவில் ெதாடங்கப்பட்டது. இதன் தலைமையகம் டெல்லியில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : ISIS ,Tamil Nadu ,NIA , Funding of ISIS terror organization raided in 15 states including Tamil Nadu: NIA action; More than 100 people were arrested
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...