×

ரூ. 300 கோடி மதிப்பீட்டிலான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பணிகளை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்குகள் நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்கள் புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்ததுதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கோயில் உட்கட்டமைப்பு பணிகள், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய முறை வரிசை, காத்திருப்பு அறை, நடைபாதை, மருத்துவ மையம், ஓய்வறைகள், தங்கும் விடுதிகள் மேம்படுத்துதல், தீத்தடுப்பு கண்காணிப்பு, பொது அறிவிப்பு கட்டுப்பாட்டு அறை, பணியாளர்கள் குடியிருப்பு, முடிக்காணிக்கை செலுத்துமிடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக்கூடம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 28.09.2022 அன்று காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார்கள். இதற்கான முன்னேற்பாடு பணிகளை இன்று  (22.09.2022) திருச்செந்தூரில்  மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு  ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுக்கு பின் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து திருக்கோவில்களுக்கு வருகை தரும் இறையன்பர்களுக்கும்,  பொதுமக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட வேண்டும் என்று உத்தரவிட்டதற்கேற்ப இதுவரை அதாவது 15 மாதங்களில் 15-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, அரசு செயலாளர், ஆணையர், கூடுதல் ஆணையர்கள் ஒத்துழைப்போடு,  பல்வேறு புதுப்புது திட்டங்களை வடிவமைத்து,  இந்து சமய அறநிலையத்துறை உருவான ஆண்டு முதல் எந்த ஆட்சியிலும் செய்ய தோன்றாத வகையிலும் சிறப்பான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில,  திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,  பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயில்,  பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் என முக்கிய திருக்கோயில்களில் எல்லாம் பெருந்திட்ட (மாஸ்டர் பிளான்) வரைவை ஏற்படுத்தி,  அத்திட்ட அறிக்கையின்படி திருக்கோயிலுக்கு வருகின்ற பக்தர்களின் அடிப்படை தேவைகள், தொன்மையான திருக்கோயில்களை பழைமை மாறாமல் பாதுகாக்க வேண்டிய பணிகள் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.  

வடமாநிலங்களில்தான் 100 கோடி, 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று கேள்விப்பட்டிருப்போம்.  முதன் முதலில் இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் பங்கேற்புடன் ரூபாய் 300 கோடி செலவிலே இந்த திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மேம்பாட்டுப் பணிகளும், ஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் திருக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த பணிகளை விரைந்து மேற்கொண்டு குடமுழுக்கு நடத்திட வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதோடு, இதுவரை இத்திருக்கோயிலுக்கான பெருந்திட்ட வரைவை மூன்று முறை  ஆய்வு செய்து, தேவையான சிறிய மாற்றங்களையும் ஏற்படுத்தி இறுதி செய்துள்ளார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 28.09.2022 அன்று சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து  காணொலிக் காட்சி வாயிலாக இந்த பெருந்திட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளார்கள்.  திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான  மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் சூரசம்காரம், கந்த சஷ்டி போன்ற விழாக்கள் மற்றும் இதர நாட்களில் இந்த கோயிலில் லட்சக்கணக்கில் கூடுகின்ற பக்தர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில்  இந்த திருக்கோயிலுக்கு நெடுஞ்சாலையிலிருந்து நேரடியாக பாதை அமைக்கின்ற பணிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் உடன் கலந்தாய்வு செய்து அவரையும் நேரில் வர வைத்து அதற்குண்டான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருகின்றன.

இந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களும் இந்த கோயிலின் மேம்பாட்டு  பணிகளுக்கு ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றார். அதேபோல தமிழ்நாடு முதலமைச்சர் இறையன்பர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர உத்தரவிட்டதனை தொடர்ந்து இந்த திருக்கோயிலில் வருவதற்கு முன்பு கடலில் சென்று கை கழுவி கால்கழுவி ஐதீகமாக உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அப்படிப்பட்ட ஒரு நிலை கடினமாக இருப்பதை அறிந்து இன்றைக்கு திருச்செந்தூர் கோயிலுக்கு செல்லும் பொழுது அதையும் ஆய்வு செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கு உண்டான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வெகு விரைவில் மாற்றுத்திறனாளிகளும் கடற்கரை ஒட்டி இருக்கின்ற கடல் நீரை தொட்டு அவர்கள் வணங்குகின்ற ஒரு நல்ல சூழலையும் அதற்குண்டான முயற்சிகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்திருக்கோயில் வளாகத்தின் மேம்பாட்டு பணிகள், திருப்பணிகள், குடமுழுக்கு அனைத்தையும் சேர்த்து 300 கோடி ரூபாய் அளவில் செலவிட திட்டமிடப்பட்டிருக்கின்றது. அனைத்து ஒப்புதல்களும் முறையாக பெறப்பட்டிருக்கின்றன. அன்னதான கூடம், மருத்துவ மையம், ஆழிக்கிணறுக்கு செல்லுகின்ற பாதைகள், கடலில் குளியலுக்கு பிறகு உடைமாற்றும் அறைகள், தங்கும் விடுதிகள் அனைத்தும் ஒருங்கிணைந்த மேம்பாட்டு பணிகளாக மேற்கொள்ளப்பட உள்ளன.  இந்த திட்டத்தை பொறுத்தவரை ஹெச்.சி.எல் நிறுவனத்தினர் ரூபாய் 200 கோடியை செலவு செய்வதாக ஒப்புதல் அளித்துள்ளார்கள், மீதப் பணத்தை இந்த திருக்கோயிலின் பணத்தில் இருந்தும், பிற உபயதாரர்கள் வந்தாலும் அவர்களையும் வரவேற்று மேற்கொள்வோம். எந்தவிதமான சிறு குற்றச்சாட்டுக்கும் இல்லாமல் முழுமையாக வெளிப்படை தன்மையோடு இந்த திருப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கின்றார்கள்.

இந்திய ஒன்றியத்தில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களும் திரும்பிப் பார்க்கின்ற வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பக்தர்களுக்கு ஒரு கண்கொள்ளா காட்சியை பக்தர்களுக்கு ஒரு மன மகிழ்ச்சியை முதல்வர் ஏற்படுத்தி தர உள்ளார்கள். இந்த திட்டம் ஆண்டு கணக்கிலான திருப்பணி என்பதால் கந்த சஷ்டிக்கும் இதற்கும் எந்த இடையூறும் வராது. கந்த சஷ்டி விழாவிற்கு எந்த இடையூறும் இல்லாமலும் பார்த்துக் கொள்ளவும் அலுவலர்கள் உறுதி கொண்டிருக்கிறார்கள்.

நம்மைப் பொறுத்தவரை இந்த திட்ட பணிகள் முடிந்த பிறகு சட்டமன்ற தேர்தலில் எதிர்நோக்கின்ற பொழுது இறை அன்பர்கள் இந்து மதத்தின் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் இந்த திருப்பணி ஒன்றிற்காகவே மீண்டும் தமிழக முதல்வர் முதலமைச்சர் ஆக வேண்டும். இவர் இருந்தால் தான் பல்வேறு திருக்கோயில்களின் திருப்பணிகளை நிறைவேற்றி தருவார் என்ற வகையில் திருப்பணிகளை  திட்டமிட்டு குறுகிய காலத்தில்முடிப்பதற்கு திட்டமிட்டு இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., கூடுதல்  ஆணையர் இரா. கண்ணன், இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே.செந்தில் ராஜ், இ.ஆ.ப., திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள் முருகன், குழு உறுப்பினர்கள் இணை ஆணையர்கள்  மற்றும்  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tiruchendur Arulmigu Subramiya Swami Tirukoi ,K. Stalin , Tiruchendur Arulmiku Subramania Swami Temple, video presentation, Principal M.K.Stalin
× RELATED மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே...