‘முத்ரா’ கடன் திட்டம் மூலம் பயன் பெற்ற 26,750 பேர் ஒரே ஆண்டில் ஆயிரம் கோடி கடன்: எஸ்பிஐ அதிகாரி பெருமிதம்

சென்னை: ‘பிரதமரின் முத்ரா கடன் திட்டம் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 26,750 பயனாளிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கியுள்ளோம்’ என்று எஸ்பிஐ தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா தெரிவித்துள்ளார். எஸ்பிஐ வங்கியின் தமிழ்நாடு, புதுச்சேரி வட்ட தலைமை பொது மேலாளர் ரா.ராதாகிருஷ்ணா அளித்த சிறப்பு பேட்டி: மக்களின் நம்பிக்கைக்குரிய வங்கியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளது. அதற்கு, வாடிக்கையாளர்களின் தேவையறிந்து செயலாற்றுவதுதான். எஸ்பிஐக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 1,247 வங்கி கிளைகள், 2,389 வாடிக்கையாளர் சேவை மையங்கள் உள்ளன. மக்களுக்கு எஸ்பிஐ நேரடியாக வழங்கும் சேவைகள் தவிர மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் எஸ்பிஐ முக்கிய பங்கு வகிக்கிறது.

பிரதமரின் அறிவுறுத்தலின் படி மத்திய அரசின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். உதாரணமாக பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கு 10 லட்ச ரூபாய் வரை கடன் தருகிறாம். 2021-22 நிதியாண்டியில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 26 ஆயிரத்து 750 பேருக்கு ரூ.1034.66 கோடி கடனாக வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டிலும் ஆகஸ்ட் மாதம் வரை 9,851 பேருக்கு  ரூ.866.57 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து இரவு நேர விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறோம்.

கடன் பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும், நபர்களுக்கு விரைவாக கடன் வழங்க அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளோம். ரிசர்வ் வங்கி அனுமதித்த, வழிகாட்டி விதிகளின் அடிப்படையில்தான் எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர்களிடம் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. நாங்கள் எப்போதும் வாடிக்கையாளர்களின் நலனில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். அதனால் சேமிப்பு கணக்கு தொடங்க மட்டுமின்றி, வைப்பு நிதி திட்டம் உட்பட நிதிச் சேவைகளை பெற எஸ்பிஐதான் சிறந்த வங்கி. இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும் எஸ்பிஐதான் சிறந்த சேவை வழங்குகிறது. எஸ்பிஐக்குதான் சுமார் 72 நாடுகளில் கிளைகள் உள்ளன.  தள்ளுவண்டி வைத்திருப்பவர்களும் தங்கள் தொழில் பெருக எங்களிடம் கடன் பெற முடியும். ஆக சிறுவர் முதல் முதியவர் வரை சமூகத்தின் அனைத்து வயதினருக்கும், தொழில் முனைவோருக்கும் எங்கள் வங்கியில் சேமிப்பு திட்டங்கள், நிதி பெருக்கும் திட்டங்கள் உள்ளன. இவ்வாறு ராதாகிருஷ்ணா தெரிவித்தார்.

* அடல் ஓய்வூதிய திட்டம்

எங்கள் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கி மூலம் தரப்படும் அடல் ஓய்வூதிய திட்டம்,  காப்பீடு  திட்டங்களான பிரதம மந்திரியின்  ஜீவன் ஜோதி பீமா யோஜனா(பிஎம்ஜேஜேபிஒய்), சுரக்‌ஷா பீமா யோஜனா(பிஎம்எஸ்பிஒய்) ஆகிய திட்டங்களிலும்  ஆர்வத்துடன் இணைந்து  வருகின்றனர். இந்த திட்டங்களில் சேருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு  அதிகரித்து வருகிறது.

அடல் ஓய்வூதிய திட்டத்தில்  சேருபவர்களின் எண்ணிக்கை 2020-21ம் ஆண்டில்  89,536ஆகவும்,  2021-22ம் ஆண்டில் 1,07, 795ஆகவும் உயர்ந்துள்ளது. அதிலும் நடப்பு நிதியாண்டில்  இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் வரை கடந்த 5 மாதங்களில் 35ஆயிரத்து 624பேராக உள்ளது.

* விவசாயிகளுக்கு ‘யோனா கிரிஷி’

தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலத்தில் 2021-22 நிதியாண்டில்  9லட்சத்து 3 ஆயிரத்து  506 விவசாயிகளுக்கு 14 ஆயிரத்து 154 கோடி ரூபாய் ‘யோனா கிரிஷி’ திட்டத்தின் கீழ் கடன் அளிக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டிலும்  ஆகஸ்ட் மாதம் வரை 2 லட்சத்து 17 ஆயிரத்து 124 பேருக்கு இதுவரை 6ஆயிரத்து 819 கோடி ரூபாய் விவசாய கடனாக வழங்கப்பட்டுள்ளன.

* 4 வங்கிகளில் ஒன்று

சிறு,குறு தொழில்களின் வளர்ச்சிக்காக ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தமிழக அரசு அறிவித்துள்ள  திட்டத்தின் கீழ் கடன் கொடுக்க தேர்வு செய்யப்பட்டுள்ள 4 வங்கிகளில் எஸ்பிஐ வங்கியும் ஒன்று.

* கட்டணமில்லா சேவை

எஸ்பிஐ வங்கி என்றால் எதற்கும் கட்டணம், எல்லாவற்றுக்கும் கட்டணம் என்ற நடைமுறை அமலுக்கு வந்து விட்டது. ஆனால் ஆச்சர்யமாக உங்கள் கணக்கு கையிருப்பு விவரங்களை கட்டணமில்லாமல் தெரிந்துக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு நீங்கள் கட்டணமில்லா சேவை எண்களான 1800 1234 மற்றும் 1800 2100 ஆகியவற்றை தொடர்புக் கொள்ளலாம்.

* எஸ்பிஐ யோனா ஆப்

வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் வங்கி கணக்கை கையாள முடியும். பண பரிமாற்றம் மட்டுமின்றி புதிய சேவைகள் பெறவும், கடன் வாங்கவும் இந்த செயலியை பயன்படுத்த முடியும். இதற்கு வாடிக்கையாளர்கள் யோனா (YONO) என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

* நாங்கள்தான் மேஜர்

எஸ்பிஐ தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கடன் அட்டை(கிரெடிட் கார்டு), ஓய்வூதியம், காப்பீடு , பரஸ்பர நிதி(மியூச்சுவல் ஃபண்ட்) உட்பட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால் இவற்றில் பெரும்பான்மையான பங்குகளை எஸ்பிஐ வங்கிதான் வைத்திருக்கிறது. எஸ்பிஐ பென்ஷன் ஃபண்ட்ஸ் பிரைவேட் லிமிடட்டில் 92சதவீத பங்குகளை எஸ்பிஐதான் வைத்து உள்ளது. எனவே எஸ்ஐபி வங்கி பிற நிறுவனங்களுடன் இணைந்து வழங்கும், இந்தச் சேவைகள் பாதுகாப்பானது.

Related Stories: