ஹைபர் டென்ஷனா? சிறுநீரகம் பத்திரம்!

நன்றி குங்குமம் தோழி

ஹைபர் டென்ஷன் என்று குறிப்பிடப்படும் உயர் ரத்த அழுத்தம் (BP), பெரும்பாலும் இதயம் சம்பந்தமான நோய்களுடன் நேரடியாக தொடர்புடையது.  ஆனால் உயர் ரத்த அழுத்த நிலை, சிறுநீரகங்களையும் சேதப்படுத்தும் என்பது பலருக்கு தெரியாது. உண்மையாக சொல்லப்போனால் உயர் ரத்த அழுத்த நிலை சிறுநீரக செயல்பாட்டினை முற்றிலும் செயலிழக்க செய்யும். சிறுநீரக குறைபாட்டிற்கு நீரிழிவு நோய் மிக முக்கிய காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இரண்டாவது பொதுவான காரணம் ரத்த அழுத்தம் என்கிறார் நெப்ராலஜிஸ்ட் டாக்டர் வெங்கடேஷ்.  

‘‘மரபணுவியல் உட்பட உயர் ரத்த அழுத்தத்துக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் முறையற்ற உணவுப்பழக்கம் முக்கிய காரணமாகும். அதிக உப்பு அல்லது கொழுப்புசத்து உள்ள உணவு, அதிக கொலஸ்டிரால் உள்ள  உணவு ஆகியவை உயர் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கும். நீரிழிவு நோயும்  மற்றொரு காரணியாக இருக்கலாம்.

ஏனெனில் நீரிழிவு நோய் இருதய குழாயினை சேதப்படுத்தி அதிரோஸ்கிளிரோஸ் என்னும் நிலைக்கு வழிவகுக்கிறது. அதாவது இருதய குழாயின் சுவர்களில் கொழுப்பு உள்ளிட்ட படலங்கள் படிந்து, அதனை தடிக்க செய்கிறது. புகைபிடித்தல், உடல் பருமன், அதிக மது அருந்துதல் போன்றவையும் உயர் ரத்த அழுத்த நிலையை ஏற்படுத்தும்’’ என்கிறார்.

சிறுநீரகம் சேதம் ஏற்பட காரணம்?

ரத்த நாளங்கள், உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்தத்தை விநியோகிக்கும் சேனல்கள் ஆகும்.  இவை இருதயத்திற்கு  நுண்குழாய்கள் மற்றும் நரம்புகள் மூலம் ரத்தத்தை எடுத்து செல்லும். நம் உடலில் உள்ள ரத்தம் அனைத்தும் தினமும் பல முறை நம் சிறுநீரகங்கள் வழியாக செல்கிறது. இதற்காக, சிறுநீரகங்கள் செயல்பட நிறைய ரத்த நாளங்களைப் பயன்படுத்துகின்றன. சிறுநீரகங்களுக்கு ரீனல் ஆர்ட்ரீஸ் ரத்தத்தை வழங்குகிறது. அவை பல வகையான ரத்த நாளங்கள் வழியாக பிரிந்து சிறுநீரகத்திற்கு ரத்தத்தை எடுத்து செல்ல உதவுகிறது. அவ்வாறு எடுத்தும் செல்லப்படும் ரத்தம் நெஃப்ரான்கள் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது.  

உயர் ரத்த அழுத்தம் ஆனது, இந்த ரத்த நாளங்களின் உள் சுவர்களில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் நெஃப்ரான்களுக்கு ரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதைப் பாதிக்கிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு சேர சேர அவற்றின் மேல் பகுதி தடிமனாகிக் கொண்டே போகும். விளைவு ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்படும்.

இதனால் சிறுநீரகத்திற்கு தேவையான ரத்தம் செலுத்தப்படாமல் தடை செய்யப்படுகிறது. ஒரு கட்டத்தில் ரத்தம் செல்வது முழுவதும் நின்றுவிட்ட நிலையில் சிறுநீரகம் தன் செயல்பாட்டினை முற்றிலும் இழந்துவிடும். இதற்கு ஒரே தீர்வு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை. கூடுதலாக, சேதமடைந்த சிறுநீரகமானது, ரத்த அழுத்தம் அதிகரிப்பதன் விளைவாக உடலின் செயல்பாட்டிலும் பல்வேறு விதமான சேதங்கள் ஏற்படுத்துகிறது.

உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க மருந்து மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுக்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது ரத்த அழுத்தத்தைக் குறைத்து சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். தினசரி சராசரியாக 30 நிமிட மிதமான-தீவிரம் கொண்ட உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

இது,  ரத்த அழுத்த அளவை மேம்படுத்தும். உடல் ஆரோக்கியத்தையும் காக்கும். ஆரோக்கியமான சீரான உணவுகள் உட்கொள்வதால், உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் நன்றாக செயல்படும். ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமான ஒன்றாக, உடல் எடையை பராமரிப்பது அவசியம். பி.எம்.ஐ அளவு 25க்கு குறைவாக இருந்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது என்று அர்த்தம்.

மேலும் சுறுசுறுப்பாக இருப்பதுடன், மன அழுத்தத்தை குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது ரத்த நாளங்களில் சேதம் விளைவிப்பது மட்டுமில்லாமல் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வழிவகுக்கும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது அனைவருக்கும் நல்லது. இதன் மூலம் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயங்களில் இருந்து தங்களை காத்துக் கொள்ளலாம். ரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துவது மூலம் ஒருவரின் சிறுநீரகங்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.

தொகுப்பு: ரித்திகா

Related Stories:

>