முரண்பாடான உணவுகள்!

நன்றி குங்குமம் தோழி

பூமியில் ஒவ்வொரு மனிதனும் நீண்டகாலமாகவும், ஆரோக்கியத்துடனும் வாழவே விரும்புகிறான். அதில் அவன் தினசரி உண்ணும் உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது.குறிப்பிட்ட உணவு மற்றும் அத்துடன் சேர்ந்துள்ள மற்ற வகை உணவுகளும் உடல் திசுக்களின் வளர்சிதை மாற்றத்திற்கு எதிராகவோ அல்லது அதன் இயக்கத்தினை தடை செய்யும் குணங்களை உடையதாக இருந்தால் அவ்வகை உணவுகள்தான் முரண்பாடான உணவுகள்.

ஆச்சார்ய சரக முனிவரின் கூற்றுப்படி உணவும், மருந்தும் இடம், காலம், நேரம், செரிமான சக்தி, மருந்தின் அளவு, பழக்க வழக்கம், உணவுகளின் சேர்க்கை, உணவின் தரம், சாப்பிடும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் போன்றவைகளின் அடிப்படையில் முரண்பாடான உணவாக கருதப்படுகிறது.

சில உணவுகளை ஒரே நேரத்தில் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. உதாரணத்திற்கு வாழைப்பழம் மற்றும் பசும்பால். வாழைப்பழத்தின் பண்பு உஷ்ணத்தினையும், பாலின் பண்பு குளிர்ச்சியினையும் கொண்டுள்ளது. புளிப்பு, பாலுடன் சேரும் போது செரிமான குறைபாடு உண்டாகும். குடலில் நச்சுக்கள் உற்பத்தியாகி ஒவ்வாமை ஏற்படும்.

*பழங்களையும் பாலையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது.

*பீன்ஸ் மற்றும் பாலாடைக்கட்டியும் பொருந்தாத உணவு. பீன்ஸ் துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்டது. பாலாடைக்கட்டி புளிப்புச்சுவை. இதுவும் செரிமான பிரச்னையை ஏற்படுத்தும்.

இவ்வாறு பொருத்தமற்ற முரண்பாடான உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்-பெண் மலட்டுத்தன்மை, பார்வை இழப்பு, மயக்கம், வாய்ப்புண், ஜீரணக்கோளாறு என பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறோம். கூடிய மட்டும் இணக்கமான உணவுகளை சாப்பிட பழகிக்கொள்வது நல்லது.

தொகுப்பு: கஸ்தூரி லோகநாதன், சென்னை.

Related Stories:

>