சருமத்தை மிருதுவாக்கும் ஆலிவ்

நன்றி குங்குமம் தோழி

காலையில் மழை இரவு நேரங்களில் பனி என தமிழகம் முழுதும் பருவநிலை ஊட்டி, கொடைக்கானல் போல் மாறிவிட்டது. ஒவ்வொரு சீதோஷ்ணநிலை மாறும் போது, நம்முடைய சருமத்தில் அதற்கான மாற்றங்கள் தென்படும். குளிர்காலம் வந்துவிட்டால், சருமம் வறண்டு, உதடு வெடித்து, பாதங்களில் பித்தவெடிப்பு போன்ற சரும பிரச்னைகள் ஏற்படும். அவை நீங்க என்ன செய்யலாம்...

*குளிர்காலத்தில் சரும வறட்சியைப் போக்க உணவில் பச்சைக் காய்கறிகள், பழம், மோர் நிறைய சாப்பிட வேண்டும்.

*சரும வறட்சியைத் தடுக்க ஆலிவ் எண்ணெய் அல்லது ஆல்மண்ட் எண்ணெய் தடவிக்கொண்டு சூரிய ஒளி படுமாறு இருக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

*காலையும், மாலையும்  ஸ்கின் மாய்ஸ்ரைசர் உபயோகப்படுத்துவதன் மூலம் சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கலாம்.

*உதடுகளில் ஏற்படும் வறட்சியைப் போக்க காலை, மாலை இருவேளை உதடுகளில் வெண்ணெயைப் பூச வேண்டும். ரோஜாப்பூ இதழ்களை பால் விட்டு அரைத்து தடவி வந்தாலும் வெடிப்பு ஏற்படாது.

*தோல் சீவிய வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் நான்கு டீஸ்பூன் ஆல்மண்ட் எண்ணெய், ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து அரைக்க வேண்டும். இதை பேஸ் பேக்காக முகத்தில் போட்டு அரைமணி நேரம் கழித்து கழுவ வேண்டும். உங்கள் முகத்தில் புதுப்பொலிவு உண்டாகும்.

*பாத வெடிப்பு வராமல் தடுக்க வாரம் ஒருமுறை நீரில் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு, தரமான ஷாம்பு சிறிது கலந்து கால்களை அதனுள் பத்து நிமிடங்கள் அமிழ்த்தி ஊற வைக்க வேண்டும். பிறகு ப்யூமிக் ஸ்டோன் கொண்டு பாதத்தை தேய்த்துவிட்டு ஈரமில்லாமல் துடைக்க வேண்டும். பிறகு மாய்ஸ்ரைஸர் தடவவும்.

*வாழைப்பழம், தேன், பன்னீர் ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் வறண்டு போகாமல் இருக்கும்.

*பாசிப்பருப்புடன் ஆரஞ்சு பழத்தோல் மற்றும் பால் ஆகியவை சம அளவு எடுத்து அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமம் வறண்டு போகாமல் தடுக்கலாம்.

*குளிர்காலங்களிலும் தண்ணீர் குடிப்பது அவசியம்.

*பழங்கள், ஆவியில் வேக வைத்த காய்கறிகள் சாப்பிடலாம். ஆரஞ்சு, ஆப்பிள், செர்ரி, உலர்ந்த திராட்சை, இலந்தைப்பழம் சாப்பிடலாம்.

*குளிக்கும் முன் உடலில் லேசாக தேங்காய் எண்ணெய் தேய்த்து பிறகு குளித்தால் தோல் எளிதில் வறண்டு போகாது.

*தலையின் தோலில் வறட்சி ஏற்பட்டு பொடுகு வராதிருக்க வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.

- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories:

>