×

ஆளுமைப் பெண்கள்

நன்றி குங்குமம் தோழி

தொழில்முனைவோர் முனைவர் சித்ரா

கனவினை துரத்திப் பிடிப்பவராக இருந்த காரணத்தால், பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, அந்த கனவுகளை நினைவாக்குவதையே வாழ்க்கையின் முக்கிய அங்கமாக கொண்டிருக்கும் முனைவர் சித்ரா தனது துறை சார்ந்த ஆளுமைப் பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

“சுங்குடிச் சேலைக்கு பேர் போன திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, பெங்களூருக்கு திருமணமாகி சென்று, ஒரு வருட ஜப்பானிய பயிற்சிக்குப் பின்,  தற்போது இருபத்தி ஐந்து வருடங்களாக ஹாங்காங்கில் வாழ்ந்து வருகிறேன். இருபது ஆண்டுகள் கணிப்பொறித் துறையில் பணியாற்றி விட்டு, தற்போது என்னுடைய சொந்த நிறுவனத்தில் புதுப்புது செயலிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். அத்துடன் ஹாங்காங் சிட்டி பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறேன்.

ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனம், மென்பொருள் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் மேலாண்மை பயிற்சிகளைத் தரும் நிறுவனம் என மூன்று நிறுவனங்களுடன் என்னை இணைத்துக் கொண்டு ஒரு பன்முகத்தன்மையோடு செயலாற்றி வருகிறேன்’’ என்று பேசத் துவங்கினார் சித்ரா.செயலி பணியோடு தமிழ் கொரிய உறவுகள் பற்றியும் தமிழ் சுமேரிய உறவுகள் பற்றியும் தீவிரமான ஆய்வில் ஈடுபட்டு வரும் இவர், பத்திற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட கருத்தரங்குகளில் விளக்கவுரை அளித்தது மட்டுமில்லாமல்  ஆய்விதழ்களிலும் வெளியிட்டுள்ளார். விரைவில் அதனை நூலாகவும் வெளியிட இருப்பதாக தெரிவிக்கும் சித்ரா அது குறித்து யுடியூப் சேனலிலும் பதிவேற்றம் செய்து வருகிறார்.

‘‘எனக்கு பன்னாட்டு மொழிகளை கற்க பிடிக்கும். அந்த ஈடுபாடு காரணமாக ஜப்பான், கான்டனீஸ் மற்றும் சீன மொழிகள் உட்பட பத்து மொழிகள் வரை கற்றிருக்கேன். அந்த மொழித்திறனால் குளோபோல் (Globol) என்ற செயலி மூலம் படங்கள் ெகாண்ட அகராதியினை உருவாக்க முடிந்தது. உலகிலேயே உயரமான கட்டிடங்கள் கொண்ட நகரங்களில் எலிவேட்டர் (Elevator Pitching Contest) போட்டி நடைபெறும்.

அந்த போட்டியின் சிறப்பம்சமே நம்முடைய கண்டுபிடிப்பினை பற்றி ஒரு நிமிடத்தில் விளக்க வேண்டும். அந்த போட்டியில் என்னுடைய குளோபோல் செயலி பற்றி விவரிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் என்னுடைய கண்டுபிடிப்பு தேர்வாகி, ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்கா (Hong Kong Science and Technology Park) சார்பாக அந்த செயலியை உருவாக்க நிதியும் தொழில்நுட்ப உதவியும் கிடைத்தது. இப்போது என்னுடைய செயலி முழுமையடைந்து அதை மார்க்கெட் செய்ய ஆயத்தங்கள் நடைபெற்று வருகிறது’’ என்றவர் ஹாங்காங் கணினி சமூகத்தின் பெண்கள் செயற்குழுவில் இடம் பெற்று, சிறந்த தன்னார்வ தொண்டிற்கான விருதையும் பெற்றுள்ளார்.

‘‘ஆய்வு பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்பது எனக்கு கல்லூரி நாட்களில் இருந்தே கனவு. திருமணம், குழந்தை, புலப்பெயர்வு போன்ற பல காரணங்களால் என்னுடைய அந்த கனவினை நினைவாக்க முடியாமல் போனது. ஆனால் 25 ஆண்டுக்கு பிறகு அந்த வாய்ப்பு  தேடி வந்தது. கணினித் துறையில் தகவல் அமைப்பு சார்ந்த ஆய்வுப் பட்டத்தை சிறப்பான முறையில் முடித்தேன்.

இளங்கலை மாணவர்கள் வெளிநாடு சென்று பயிலும் போது அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு எது உதவுகிறது என்பது குறித்து என்னுடைய ஆய்வு இருந்தது. சீனாவின் குவாங்சாவ் நகரில் நண்பர்களுடன் இணைந்து பர்ல் டெல்டா இன்னொவேடிவ்  என்ற இந்தியப் பள்ளியை மூன்று வருடங்களாக இயக்கி வந்தேன். தற்போது, மீண்டும் அதே பள்ளியினை ஹாங்காங்கில் துவங்க முயன்று வருகிறேன்’’ என்று கூறும் சித்ரா தன் கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

எம்.சி.ஏ மற்றும் கணிதம் (சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் இடம்)இரண்டிலும் முதுகலைப் பட்டதாரியான இவர் சிலகாலம் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றி  உள்ளார்.  பிறகு திருமணமாகி பெங்களூருக்கு குடிபெயர்ந்தேன். என் அப்பா அரசு  அதிகாரி. அதனால் அவருக்கு என்னை அரசு அதிகாரியாக்க வேண்டும் என்று விருப்பம். ஐ.ஏ.எஸ்கான பயிற்சி எடுத்தேன்.

ஆனால் தேர்ச்சி பெற முடியவில்லை. இதற்கிடையில் பெங்களூரில் மூன்றாண்டு காலம் வேலை பார்த்து வந்த போது, பயிற்சிக்காக ஜப்பான் செல்ல வாய்ப்பு வந்தது. வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஜப்பானுக்கு பறந்தேன், செயலியை உருவாக்கினேன்’’ என்றவர் ஹாங்காங்கில் குழந்தைகள் கலைக் குழுவை நிறுவி இந்திய மற்றும் தமிழகப் பண்பாடு, கலாச்சாரம் குறித்து பல நிகழ்ச்சிகளை ஹாங்காங் அரசு மற்றும் இந்திய தூதரகம் மூலம் பல கலாச்சார நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார்.

எழுத்தின் மேல் உள்ள அதீத விருப்பத்தினால் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் இதுவரை 15 நூல்களை வெளியிட்டுள்ளார். வலைத்தளத்திலும் குழந்தைகளுக்கான வெளிநாட்டு கதை மற்றும் சிறுகதை நூல்களை இயற்றியுள்ளார். பல மொழி அகராதிகளை வெளியிட்டவர், ஹாங்காங் வாழ் தமிழர்களின் செயல்பாடுகளை எடுத்துக் கூறும் வகையில் ‘ஹாங்காங் தமிழ் மலர்’ என்ற மின்னிதழையும் நடத்தி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கணினி பற்றிய கட்டுரைகள், சாகச நாயகன் ஜாக்கிசான் பற்றிய தொடரையும் எழுதியுள்ளார்.

கதை, கவிதை மட்டுமில்லாமல் இவர் எழுதி, இயக்கி, நடித்த ‘மந்திரத் தூரிகை’ என்ற நாடகம் தமிழ் பண்பாட்டுக் கழக நாடக விழாவில் முதல் பரிசை பெற்றது. தமிழ் மீது இவர் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக தமிழ் பண்பாட்டுக் கழக செயற்குழு மற்றும் ஐம்பதாம் ஆண்டு மலர் குழுவுடன் இணைந்து செயலாற்றும் வாய்ப்பினை பெற்றுள்ளார். குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், சீனர்கள், வட இந்தியர்களுக்கு தமிழை பயிற்றுள்ளார். YIFC கல்விக் கழகத்தின் தமிழ் வகுப்பிலும் ஒரு வருடம் ஆர்வலராக செயலாற்றிஉள்ளார்.

‘‘வாய்ப்புகள் நம்மைத் தேடி வராது. நாம்தான் அதனை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். கண்களை திறந்து சுற்றிலும் கவனி, காதுகளை தீட்டி கூர்ந்து கேள், வாயால் பேசி ஐயத்தை தீர், மனதால் தீர ஆய்ந்து செயல்படு” என்ற கொள்கை விளக்கங்களோடு நிறைவாக பேசி முடித்தார் முனைவர் சித்ரா.

தொகுப்பு: தி.ஜெனிஃபா

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED பார்ப்பவர் கண்களில் அழகு..!