ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறக்கும் போதும், உடல் எடையைக் குறைக்க வேண்டும், கார் வாங்க வேண்டும், வீடு வாங்க வேண்டும்... என பல இலக்குகளை நிர்ணயித்து, தீர்மானங்களை எடுக்கிறோம். இந்த கனவுகளுக்கு நடுவே இந்தாண்டு, உளவியல் ஆரோக்கியம் குறித்து முக்கியத்துவம் தருவோம்.
முழு ஆரோக்கியம் என்பது உடலளவில் மட்டுமில்லாமல் மனதளவிலும் நலமாக இருப்பதைத்தான் குறிக்கும். மனதளவில் தளர்ந்து போனால், அது நம் உடலையும் பாதிக்கும். கடந்த 2020 அந்த பாடத்தை நமக்கு நன்கு புகட்டியது. ஊரடங்கில் வீட்டுக்குள் இருந்த சமயம், பலர் தங்களின் உண்மையான மகிழ்ச்சி மற்றும் மன நிம்மதியை அளிக்கும் விஷயங்களை உணர்ந்தனர்.
மனநல ஆலோசகர் சித்திகா அய்யர், உளவியல் ஆரோக்கியத்திற்காக நாம் 2021ல் பின்பற்றக் கூடிய சில ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் நம்முடன் பகிர்கிறார். ‘‘நம் உடலில் எதிர்ப்புச் சக்தி இருக்கும் போது, கொரோனா வைரஸ் வந்தாலும் நம்மைத் தாக்குவது இல்லை. அதே போல, உளவியல் ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் போதும், எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை எதிர்க்கும் சக்தி நமக்குள் பிறக்கும். தினமும் பாசிட்டிவான பழக்கங்களை பயில கற்றுக் கொள்வதன் மூலம் நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி, சுறுசுறுப்பு, உற்சாக மனநிலையினை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.2020 பல பள்ளங்களை சந்தித்ததால், 2021ஐ பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் காத்திருக்கின்றனர். இந்தாண்டு நாம் செய்ய வேண்டிய முதல் வேலை, கடந்தாண்டு கற்றுக்கொண்ட பாடங்களை நினைவுகூர்வதே. இத்தனை வருடங்களாக வேலை, பொறுப்புகள் எனப் பரபரப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருந்ததில், சில பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காமல் இருந்தது. தற்போது குடும்பத்தினர் அனைவரும் பல மாதங்களாக ஒன்றாக இருப்பதன் மூலம், பல பிரச்னைகளின் காரணத்தைக் கண்டறிந்து அதை தெளிவுபடுத்த முடிந்திருக்கும். தங்கள் குடும்பத்தினரை புரிந்துகொள்ள கடந்தாண்டு சரியான நேரமாகவும் அமைந்திருந்தது. அதே போல் வரும் ஆண்டிலும், நம் உறவுகளை மேம்படுத்த நேரத்தை ஒதுக்க வேண்டும்.இன்று நேரமே இல்லை என்று கூறும் பலரும், மணிக்கணக்காக சமூக வலைத்தளத்தில் ஆன்லைனில் இருப்பவர்கள்தான். நம் செல்போனை சில நேரம் அனைத்து வைத்தாலே, பல அழகான நினைவு களையும், சிந்தனைகளையும், வளர்ச்சியையும் உருவாக்கலாம். நம் மன அமைதியைக் கெடுக்கும் முக்கிய விஷயங்களில், பணத்திற்கு பெரிய பங்குண்டு. 2020ல் வேலை இழப்பு, சம்பள குறைப்பு போன்ற பிரச்னைகளால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். மகிழ்ச்சியைப் பணம் தந்து வாங்க முடியாது என்பது உண்மை என்றாலும், பண சிக்கலால் ஏற்படும் கவலை நம் உறவுகளை, உடல் நலத்தை, மன அமைதியை பெரிதும் பாதிக்கக் கூடிய விஷயங்கள். எனவே முடிந்த வரை கடன்களை அடைத்து, சேமிப்பு பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அடுத்ததாக ‘வர்க்-லைஃப் பேலன்ஸ்’. என்னதான் வேலை முக்கியமாக இருந்தாலும், வேலையே வாழ்க்கையாகிவிடக் கூடாது. குடும்பத்தினருடன் செலவிட சில நிமிடங்களே கிடைத்தாலும், மகிழ்ச்சியாகச் செலவிடுங்கள். வேலையின் இறுக்கத்தை வீட்டிற்குள் கொண்டு வராமல், அந்த நேரம் மொபைல், டிவியை தவிர்த்து, குடும்பத்தினருடன் அன்பாக இருந்தாலே அனைவரின் மனதிலும் மகிழ்ச்சி பொங்கும். நிறுவனங்களும், ஊழியர்கள் நன்றாக ஓய்வெடுத்து, மகிழ்ச்சியான மனநிலையில் வேலைக்கு வந்தால்தான் உற்பத்தி திறனும் அதிகரிக்கும் என்பதை உணர வேண்டும். மன அழுத்தம், பதற்றம், பயத்துடன் வேலை செய்யவே முடியாது என்பதை மனதில் கொண்டு ஊழியர்களை மனிதர்களாக நடத்த வேண்டும். Me-Time எனப்படும் செல்ஃப் கேர் வழிமுறையையும் பின்பற்றுங்கள். உங்களுக்கான ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தை உடற்பயிற்சி செய்வது, ஓவியம் தீட்டுவது, பிடித்த உணவைச் சமைப்பது, காரில் நீண்ட தூரம் பயணம் செல்வது என ஒருவருக்கு மகிழ்ச்சி தரும் எந்த விஷயத்திற்காகவும் பயன்படுத்தலாம். இதன் மூலம் மன அழுத்தமும், பதட்டமும் குறைந்து, தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.கடைசியாக, மன உளைச்சலில் இருக்கும் ஒருவர், கவலையாக இருக்கிறது, வருத்தமாக இருக்கிறது எனக் கூறும் போது, நிராகரிக்காமல், அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் தீவிரத்தை உணர்ந்து செயல்படுங்கள். அவருக்கு ஆதரவு அளித்து, வேண்டிய உதவிகளைச் செய்யலாம். தேவைப்பட்டால் உளவியல் மருத்துவரை சந்திக்கலாம். இந்தாண்டு மக்கள் பலரும் உளவியல் ஆரோக்கியத்திற்கான முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். அடுத்தாண்டு கொரோனாவில் இருந்து மீண்டு வாழ்க்கை இயல்பு நிலைக்கு மாறும் என்ற நம்பிக்கையுடன் சமூக இடைவெளி, முகக் கவசம், சுற்றுப்புறச் சுத்தம் என நம்மால் முடிந்தவற்றைச் செய்து இயல்பாக இருந்தாலே போதும்” என்கிறார் மனநல ஆலோசகர் சித்திகா அய்யர்.