பதப்படுத்தப்படும் கருமுட்டைகள்!

நன்றி குங்குமம் தோழி

இப்போது பெண்கள் படிப்பு, வேலையென தங்களுக்கான வளர்ச்சியை நோக்கி நகர்ந்திருப்பதால், பலரும் திருமணத்தை தள்ளிப்போட வேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாகக் குழந்தைப் பெறுதலை ஆண் பெண் என இரு பாலினருமே தள்ளிப்போடுகின்றனர். இதனால் முப்பது வயதிற்கு மேல், உடல் வலிமை குறைந்து அழுத்தம் அதிகரித்து மேலும் சில சிக்கல்களால் கருத்தரிப்பதில் பிரச்சனைகள் உருவாகிறது. எதிர்காலத்தில் வரும் இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க, பல பெண்களும் தற்போது Egg Freezing  எனப்படும் கருமுட்டை பதப்படுத்துதல் முறையைத் தேர்வு செய்வதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் திருமணமான இந்தி நடிகை மோனா சிங், தற்போது உடலளவிலும் மனதளவிலும் குழந்தை பெற்றுக்கொள்ளத்  தயாராக இல்லை என்றும் தன் கணவருடன் பல நாடுகளுக்குப் பயணம் செய்யப்போவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், 34 வயதாகும் இவர் எதிர்காலத்தில் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படக் கூடாது என்பதற்காகத் தனது கருமுட்டைகளைப் பதப்படுத்தி உள்ளதாகவும் கூறினார்.

சினிமா துறைகளில் பலரும் Egg Freezing  முறையைப் பயன்படுத்தி குழந்தை கருத்தரித்திருந்தாலும், இந்த சிகிச்சை முறை குறித்து இளம் பெண்களிடம் விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. Egg freezing எனப்படும் கருமுட்டை பதப்படுத்துதலில்  உள்ள பயன்கள், சிக்கல்கள் குறித்து, மகப்பேறியல் - மகளிர் நோய் மருத்துவயியல் துறைகளில் 18 வருட அனுபவத்துடன், மூத்த ஆலோசகராக பணியாற்றி வரும் மருத்துவர் மாதங்கி ராஜகோபாலனிடம் பேசினோம்.

‘‘ஆண்களும் சரி பெண்களும் சரி, அவர்கள் பிறக்கும்போதே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கருமுட்டையும் விந்தணுவுடன் தான் பிறக்கின்றன.

அவர்களுக்கு வயதாகும் போது கரு முட்டை மற்றும் விந்தணுக்களின்  எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். இதை உணராமல் குழந்தைப்பேற்றைத் தள்ளிப் போடுவதால் எதிர்காலத்தில் கருத்தரிக்க முடியாமல் போகிறது. இதை உணர்ந்த சில பெண்களும் ஆண்களும் தற்போது கருமுட்டை மற்றும் விந்தணுக்களை பதப்படுத்தும் முறையினை நாடியுள்ளனர். கருமுட்டை பதப்படுத்துதல் என்பது ஒரு பெண்ணின் கரு முட்டைகளை எடுத்து குறிப்பிட்ட வெப்பநிலையில் உறைந்து போகும் படி செய்வது. பின்னர் அப்பெண் கருத்தடையை விரும்பும் நேரத்தில் பதப்படுத்தப்பட்டுள்ள கரு முட்டைகளை எடுத்து அப்பெண்ணை குழந்தைப்பேறுக்கு தயார் செய்வோம்.

ஆனால் பொதுவாக இந்த சிகிச்சை முறை கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்குச் செய்யப்பட்டு வந்தது. இதுபோன்ற தீவிரமான சிகிச்சை மேற்கொள்ளும் போது, கருப்பையில் இருக்கும் கருமுட்டைகள் வெகுவாக அழிந்து விடும். நோயிலிருந்து முழுவதுமாக குணமாகி வருபவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப அவர்களுக்கு உதவும் நோக்கத்தில்தான் இந்த Egg Freezing  முறை உருவானது. ஆனால்  இன்று ஆரோக்கியமான பெண்களும், பல காரணங்களுக்காக Egg Freezing  செய்துகொள்ள முன்வருகின்றனர். பெண்கள் 20 வயது முதல் 30 வயது வரை தான் கருவுறும் விகிதம் அதிகமாக இருக்கும்.  

அதற்குப் பின் படிப்படியாகக் கருமுட்டைகள் அழிந்து அவர்கள் குழந்தை பெறும் விகிதம் குறைந்து கொண்டே போகும். பெண்கள் இந்த அறிவியல் உண்மைகளைத் தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் தங்களின் முடிவுகளை எடுக்க வேண்டும்” என்கிறார். ஆரோக்கியமான ஒரு பெண்ணிற்கு Egg Freezing சிகிச்சையை பரிந்துரைக்கமாட்டேன் எனக் கூறும் மருத்துவர், அதை மேலும் விளக்குகிறார். “2012 வரை இந்த சிகிச்சை முறை சோதனை அளவில்தான் இருந்தது அதற்குப் பின்னரே இந்தியாவில் சட்ட ரீதியாக இந்த சிகிச்சை முறை செயலுக்கு வந்தது. ஆரோக்கியமான ஒரு பெண்ணிற்கு இந்த சிகிச்சை முறையை நான் பரிந்துரைக்க மாட்டேன்.

பிற நோயால் பாதிக்கப்பட்டு குழந்தைப்பேற்றை இழக்கும் பெண்களுக்கு இது நிச்சயம் வரப்பிரசாதம் தான். ஆனால் ஆரோக்கியமான ஒரு பெண் தாமாக முன்வந்து கருமுட்டை பதப்படுத்துதலை ஊக்குவிக்கக் கூடாது. இயற்கையாகக் கருத்தரிக்க வாய்ப்பு இருந்தும் செயற்கையாகக் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் எனப் பெண்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. பொதுவாக IVF முறையில் கருத்தரிக்கும் போது கருமுட்டை பெறப்பட்ட உடனே அது பெண்ணின் கருப்பையில் செலுத்தப்படுகிறது. ஆனால் கருமுட்டை பதப்படுத்துதல் முறையில் இரண்டு வருடம் முதல் எட்டு வருடம் வரை கூட  உறைந்த நிலையில் இருக்கிறது.

இதனால் பிறக்கப் போகும் குழந்தைக்கு ஏற்படக்கூடிய நீண்ட காலப் பக்க விளைவுகளை இன்னும் நாம் முழுமையாகச் சோதனை செய்யவில்லை. Egg Freezing செய்ய சுமார் முப்பது கருமுட்டைகளை ஒரு பெண்ணிடமிருந்து எடுக்க வேண்டும். இதற்காகக் கருப்பையில் அதிக அளவில் ஹார்மோன் செலுத்தப்பட்டுத் தூண்டப்படுவதால், அவர்களுக்கு மனதளவிலும் உடலளவிலும் சில பக்கவிளைவுகள் உருவாகலாம். கருப்பை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உருவாகும். மேலும் கருமுட்டைகள் செயல்படாமல் தோல்வியடையவும் வாய்ப்புள்ளது.

இருபது முதல் முப்பது வயதிற்குள், பெண்ணின் கருமுட்டைகள் நல்ல தரத்தில் இருக்கும். அந்த வயதில் கருமுட்டையை எடுத்து, பதப்படுத்தும் போது குழந்தை பேற்றுக்கான விகிதம் அதிகரிக்கிறது. ஆனால் கருமுட்டை பதப்படுத்துதலின் வெற்றி விகிதம் மாறுபடும். மேலும் இந்த சிகிச்சைக்கு பல லட்சங்களில் செலவாகும் என்பதால், அதற்கு ஏற்ப திட்டமிட வேண்டும். மேலும் சில பெண்களுக்கு மரபணு ரீதியாக 28 வயதிலேயே கருப்பை செயல்பாடு நின்று

விடும். இது போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள், புற்றுநோய் காரணமாக கீமோ தெரபி, ரேடியோ தெரபி சிகிச்சை மேற்கொள்பவர்கள் கருமுட்டை பதப்படுத்துதல் முறையைத் தாராளமாக நாடலாம்’’ என்கிறார் டாக்டர் மாதங்கி ராஜகோபாலன்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories:

>