திருச்சுழி பகுதியில் கண்மாய்களை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்படுமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருச்சுழி: திருச்சுழி பகுதியில் உள்ள கண்மாய்களை ஆக்கிரமித்து கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் அதிகளவில் வானம் பார்த்த பூமியாக உள்ளது. நெல் உள்ளிட்ட பல பயிர்கள் முழுக்க முழுக்க மழையை மட்டுமே நம்பியே பயிரிடப்படுகிறது. மழை காலங்களில் மழை நீரை சேமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போட்டனர்.திருச்சுழி ஒன்றியத்தில் உள்ள 135 கிராமங்களில் 103 ஒன்றிய கண்மாய்களும், 15 பொதுப்பணி துறைக்கு சொந்தமான கண்மாய்களும் உள்ளன. இக்கண்மாய்கள் முழுவதும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீரை முற்றிலும் உறிஞ்சி விடுகிறது. அதேபோல் கண்மாய்களுக்கு முறையான நீர்வரத்து கால்வாய்கள் இல்லை. அவை சேதமடைந்து தூர்வாரப்படாமலும், ஆக்கிரப்பு அகற்றபடாததாலும் உள்ளதால் மழை நீர் கண்மாய்களுக்கு முழுமையாக சென்றடைவதில்லை.இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘திருச்சுழி ஒன்றியங்களிலுள்ள 300க்கு மேற்பட்ட கிராமங்களில் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே இப்பகுதி மக்கள் வாழ்கின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் 10 வருடங்களாக கண்மாய்களை தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதாக கூறி பல கோடி ஏப்பம் விட்டதால் கண்மாய் பணிகள் முழுமை பெறவில்லை. இதனால் கண்மாய் முழுவதும் கருவேல மரங்களால் அடர்ந்து காணப்படுவதால் வருகின்ற சிறிதளவு மழைநீர் கூட தேங்குவதில்லை. கண்மாயை நம்பியுள்ள விவசாய நிலங்கள் தற்போது தரிசு நிலங்களாக காணப்படுகின்றன. இது சம்பந்தமாக பலமுறை விவசாய சங்கத்தின் மூலம் அன்றைய அதிமுக ஆட்சியில் பல போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கையும் இல்லாமல் இருந்தது. எனவே திமுக அரசு கருவேல மரங்களை முறையாக அகற்றுவதுடன், நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: