கான்டூர் கால்வாயில் கூடுதல் நீர் திறப்பு எதிரொலி சர்க்கார்பதியில் மின் உற்பத்தி 24 மெகா வாட்டாக அதிகரிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த கான்டூர் கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறப்பால், சர்க்கார்பதியில் மின் உற்பத்தி 24மெகா வாட்டாக அதிகரித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் அருகே உள்ள பரம்பிக்குளம் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் தூணக்கடவு சென்று, அங்குள்ள சுரங்கப்பாதை வழியாக சர்க்கார்பதியை வந்தடைகிறது. அப்போது, சர்க்கார்பதியில் மின்உற்பத்தி செய்யப்பட்டு, கான்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் செல்கிறது.  ஒவ்வொரு ஆண்டும் திருமூர்த்தி மற்றும் ஆழியார் அணைகளுக்கு கான்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும்போது, நீர் மின்உற்பத்தி நிலையம் இயக்கப்படுகிறது.  இந்த கால்வாயில் தண்ணீர் திறப்பு இருக்கும்போது, சர்கார்பதி நீர்மின் நிலையத்தில், அதிகபட்சமாக 30 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தியாகிறது.  சர்க்கார்பதியில் மின்உற்பத்தி நடைபெறாத இடைப்பட்ட மாதங்களில் மின் சாதன பராமரிப்பு நடைபெற்றது. இந்நிலையில் சுமார் 4 மாதத்திற்கு பிறகு, கான்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு கடந்த 16ம் தேதியன்று தண்ணீர் திறக்கப்பட்டது. தூணக்கடவில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேரடியாக சர்க்கார்பதி நீர் மின்நிலையத்தில் மின்உற்பத்தி செய்யப்பட்டு, பின் கான்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணையை சென்றடைகிறது.

 முதலில், கான்டூர் கால்வாயில் விடப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 முதல் 600கன அடியாக இருந்தது. இந்த தண்ணீர் மூலம் 12 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. வரும் 26ம் தேதி திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதால், காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  தற்போது,  தூணக்கடவிலிருந்து கான்டூர் கால்வாய் வழியாக வினாடிக்கு சுமார் 800 முதல் 850கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது சர்க்கார்பதி நீர்மின் நிலையத்தில் 12மெகா வாட்டிலிருந்து 24 மெகாவாட்டாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

 கான்டூர் கால்வாய்க்கு திறந்து விடப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கும் போது மின்உற்பத்தி கூடிக் கொண்டோ போகும். இதன் மூலம், வரும் நாட்களில் அதிகபட்சமாக 30 மெகாவாட் வரை மின்உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: