பல்கலை. துணைவேந்தரை அரசு நியமிப்பது சட்டவிரோதம்; அது அரசியல் தலையீட்டுக்கு வழி வகுக்கும்: ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானிய குழு சட்டத்துக்கு புறம்பானது என கூறி அது தொடர்பான மசோதா குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பல்கலைக்கழகங்களில் வேந்தரான மாநில ஆளுநருக்கு இருந்து வருகிறது. துணை வேந்தரை தேர்வு செய்ய பல்கலைக்கழகங்களின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் தலா ஒருவர் மற்றும் ஆளுநர் சார்பில் ஒரு பிரதிநிதி என 3 பேர் நியமிக்கப்படுவர்.

இந்த குழு கல்வி தகுதி, அனுபவம் உள்ளிட்டவை அடிப்படையில் 3 பெயர்களை ஆளுநருக்கு பரிந்துரைக்கும். அதில் இருந்து ஒருவரை துணை வேந்தராக ஆளுநர் நியமனம் செய்து உத்தரவிடுவது வழக்கமான நடைமுறையாகும். இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரும் வகையில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலும், தேவைப்பட்டால் துணை வேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் 2 மசோதாக்கள் கடந்த ஏப்ரல் 25ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

துணை வேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் மசோதா தமிழக ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. இந்நிலையில் இந்த மசோதா குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கோரி கடிதம் எழுதியுள்ளார். துணை வேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக சட்டத்துக்கு புறம்பானது என்றும் இது துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் தலையீட்டுக்கு வழி வகுக்கிறது என்று விமர்சித்துள்ள ஆளுநர், மசோதா குறித்து விளக்கம் அளிக்குமாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Stories: