பொறியியல் கல்லூரிகளில் சேர சிறப்பு பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கியது..!!

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் சேர சிறப்பு பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 110 இடங்களில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் நாளான இன்று சிறப்பு பிரிவில் 121 மாணவர்கள் ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். முதல்கட்டமாக இன்று முதல் 23ம் தேதி வரை சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டுப் பிரிவு, அரசுப்பள்ளிகளில் படித்த விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது.

மேலும் முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் என 124 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. வழக்கமாக சிறப்புப் பிரிவில் 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கும் சேர்த்து கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், இந்த முறை பொதுப் பிரிவு கலந்தாய்வின் போது தான் 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்தச் சலுகையால் அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீடு, பொதுப்பிரிவு என இரு கலந்தாய்விலும் பங்கேற்று, இடங்களை தேர்வு செய்ய கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். அதில் தங்களுக்குப் பிடித்த கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம்.

பி.இ. மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் 22 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர். 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் பி.இ. படிப்பில் சேரலாம். தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 25ம் தேதி தொடங்கி 4 சுற்றுகளாக நடைபெறுகிறது. பொறியியல் படிப்புகளில் சேர்ந்த விண்ணப்பித்தவர்களில் தகுதி உள்ளவர்களுக்கான தரவரிசை பட்டியல் 16ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தாண்டு 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்கவுள்ளன. பி.இ. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் இந்தாண்டு ரேண்டம் எண் வெளியீடு இல்லை.

Related Stories: