1.33 கோடி பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள்; 3 ஆண்டுகளுக்கு இன்டர்நெட் வசதியும் இலவசம்: ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அதிரடி..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 1 கோடியே 33 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்தார். அதன்படி சிரஞ்சேவி சுகாதார காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1 கோடியே 33 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படவிருக்கிறது.

இலவச ஸ்மார்ட் போன்களுடன் 3 ஆண்டுகளுக்கு இலவச இன்டர்நெட் வசதியும் செய்துகொடுக்கப்பட இருக்கிறது. 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த திட்டத்திற்காக டெண்டர் விடப்பட்டு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருக்கும் முதலமைச்சர் அசோக் கெலாட், வரும் செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளின் போது பெண்களுக்கு ஸ்மார்ட் போன்கள் உதவியாக இருக்கும் என்றும் கெலாட் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: