கேரள முதல்வரின் செயலாளர் மனைவிக்கு பேராசிரியர் பணி: நியமனத்தை நிறுத்தி ஆளுநர் அதிரடி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கண்ணூர் பல்கலைக் கழகத்தில் மலையாளம் இணை பேராசிரியர் பணிக்கு சமீபத்தில் நேர்முகத் தேர்வு நடந்தது. இதில், கேரள முதல்வர் பினராய் விஜயனின் தனி செயலாளரான ராகேஷின் மனைவி பிரியா வர்கீசும் பங்கேற்றார். பல்கலைக் கழக விதிகளின்படி, தகுதிப் பட்டியலில் இவர் கடைசி இடத்தில் இருந்தார். ஆனால், நேர்முகத் தேர்வுக்குப் பிறகு வெளியான ரேங்க் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். அவருக்கு இணை பேராசிரியர் பணி நியமனம் வழங்க பல்கலை.யின் சிண்டிகேட் தீர்மானித்தது. இதை நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களும், சில சிண்டிகேட் உறுப்பினர்களும் கடுமையாக எதிர்த்தனர்.

இது தொடர்பாக, ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து, பிரியாவின் பணி நியமனத்தை நிறுத்தி வைத்து ஆளுநர் உத்தரவிட்டார். இதற்கு கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களும், கண்ணூர் பல்கலை.யின் துணை வேந்தர் கோபிநாத் ரவீந்திரனும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என கோபிநாத் கூறினார். இதனால், கோபிநாத் ரவீந்திரன் மீது நடவடிக்கை எடுக்க  ஆளுநர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: