கடந்த 3 ஆண்டுகளில் 7 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

பனாஜி: ‘கடந்த 3 ஆண்டுகளில் 7 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், கோவா மாநிலத்தில் கிராமப்புற வீடுகளில் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டதை கொண்டாடும் வகையில், பனாஜியில் நடந்த விழாவில் காணொலி மூலமாக பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 70 ஆண்டுகளில் 3 கோடி கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த 3 ஆண்டில் 7 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது, கிராமங்களில் 10 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு தர வேண்டுமென்ற இலக்கை எட்ட உதவி உள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தை முதல் முறையாக அறிவித்த போது, நாடு முழுவதும் 16 கோடி குடும்பங்கள் தங்களின் குடிநீருக்கு நீர் நிலைகளை நம்பியிருந்தனர். இவ்வளவு அதிகப்படியான மக்கள், குடிநீருக்காக தினம் தினம் போராடுவதை நாங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. இன்று, ஜல் ஜீவன் திட்டத்தின் வெற்றி பெற்று இருப்பதற்கு மக்களின் பங்களிப்பு, அனைவரின் கூட்டு முயற்சி, வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல் ஆகியவையே காரணம். இவ்வாறு மோடி கூறினார்.

* கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தெரிவித்த வாழ்த்து செய்தியில், ‘பக்தி மற்றும் மகிழ்ச்சியின் இந்த பண்டிகை, ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தர வேண்டும்,’ என கூறி உள்ளார்.

Related Stories: