தண்டனையை அதிகரிக்கும்போது குற்றவாளிகளுக்கு வாய்ப்பு தரணும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனையை அதிகரிக்கும் முன்பாக, அவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைக்க வாய்ப்பளிக்கும் வகையில் நோட்டீஸ் வழங்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, வாழ்நாள் ஆயுள் தண்டனையாக மாற்றி ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட 2 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கவாய், நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் மீதான வழக்கு ‘அரிதினும் அரிதான வழக்குகள்’ பிரிவில் வருவதை விசாரணை நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை. இதன்படி, மனுதாரர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க முடியும். ஆனால், ஆயுள் தண்டனை விதித்த கீழ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. உயர் நீதிமன்றம் தனது சுய அதிகாரத்தை பயன்படுத்தி தண்டனையை உயர்த்தி இருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்வதற்கு முன், மனுதாரருக்கு நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும். அப்போதுதான், தண்டனையை ஏன் உயர்த்தக் கூடாது என்கிற தனது தரப்பு நியாயத்தை மனுதாரர் எடுத்து வைப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்த விவகாரத்தில் அவ்வாறு செய்யப்படாததையும், அரசு தரப்பில் தண்டனையை அதிகரிக்க மேல்முறையீடு செய்யப்படாததையும் கவனத்தில் கொண்டு உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: