எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது: வடமதுரை அருகே அதிர்ச்சி

வடமதுரை: வடமதுரை அருகே நான்கு வழிச்சாலையில் ஓடிக் கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல்லை சேர்ந்தவர் அருள்ஜோதி (33). இவர் திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினார். நேற்று காலை ஸ்கூட்டரில் திண்டுக்கல்லில் இருந்து வேலைக்கு சென்றார். பின்னர் மீண்டும் பணி தொடர்பாக ஸ்கூட்டரில் வடமதுரையை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் மேம்பாலத்தில் வந்தபோது, திடீரென ஸ்கூட்டரின் பின்பகுதியில் இருந்து புகை வந்தது. இதனை கண்ட அருள்ஜோதி உடனே ஸ்கூட்டரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு பார்த்தார். சில நொடிகளில் ஸ்கூட்டர் முழுவதிலும் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே அருள்ஜோதி, அவ்வழியாக சென்றவர்கள்  தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் சில நிமிடங்களில் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

Related Stories: