சேலத்தில் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி வசூல் நிதிநிறுவனம் நடத்திய பா.ஜ பிரமுகர் மனைவியுடன் சென்னையில் கைது: பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக புகார்கள் குவிகிறது

சேலம்: சேலத்தில், நிதிநிறுவன நடத்தி பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பா.ஜ பிரமுகர் மனைவியுடன் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவர்கள் மீது நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்துள்ளது.  

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே ஜஸ்ட்வின் என்ற தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் பாலசுப்பிரமணியம். பா.ஜ பிரமுகர் இவரது மனைவி தனலட்சுமி, மகன் வினோத், கதிர்வேல் மற்றும் சிலர் இந்த நிறுவனத்தை நிர்வகித்து வந்தனர். சேலத்தை தலைமையிடமாக கொண்டு வேலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்பட 8 இடங்களில் இதன் கிளைகளை தொடங்கி இருந்தனர்.

ரூ.1 லட்சம் ரூபாய் கட்டினால் ஒரு வருடத்திலேயே ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக விளம்பரம் செய்தனர். இதனை நம்பி ஏராளமானோர் பணத்தை கட்டினர். பலகோடி ரூபாய் வசூல் செய்தனர். ஆனால் அவர்கள் கூறியபடி, பணத்தை திருப்பி வழங்கவில்லை. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பணம் கட்டி ஏமாந்த வேலூரை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சேலத்தில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, அங்கிருந்த பாலசுப்பிரமணியத்திடம் பணத்தை கேட்டனர். இதில்,பாதிக்கப்பட்டவர்களுக்கும் அலுவலகத்தில் இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

அதே நேரத்தில் சேலம் மத்திய குற்றப்பிரிவில் பாலசுப்பிரமணியம் மீது மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் 2 வழக்கு பதிந்திருந்தனர். சேலம் பொருளாதார குற்றப்பிரிவிலும் நூற்றுக்கணக்கானோர் புகார் கொடுத்ததன் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே காடையாம்பட்டியை சேர்ந்த காவேரியப்பன்(36), அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், நான் 37 லட்சம் ரூபாய் கட்டியிருந்தேன். ஆனால் அவர்கள் கூறியபடி பணம் தரவில்லை. அதனை கேட்க சென்ற போது கொன்று விடுவதாக மிரட்டினர் என்று தெரிவித்திருந்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காந்திமதி, மோசடி, கொலை மிரட்டல், பண சுழற்சி திட்ட பிரிவு தடை சட்டம் ஆகிய பிரிவின் கீழ் பாலசுப்பிரமணியம், தனலட்சுமி, வினோத், கதிர்வேல் ஆகிய 4பேர் மீதும் வழக்கு பதிவு செய்தார். அவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா தனிப்படை அமைத்தார். இந்நிலையில் நேற்று சென்னையில் பதுங்கி இருந்த பாலசுப்பிரமணியம், அவரது மனைவி தனலட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலம் அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களை நிதிமன்றதில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர்கள் மீது தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு எங்கு எல்லாம் சொத்து உள்ளது எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: