மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்

வேட்டவலம்: திருவண்ணாமலையில் புதுமுயற்சியாக மாத்திரை அட்டை வடிவில் அச்சடிக்கப்பட்டுள்ள திருமண அழைப்பிதழ், சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்தவர் எழிலரசன். இவர் திருவண்ணாமலை தனியார் மருந்தியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செவிலியர் வசந்தகுமாரிக்கும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 5ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் திருமண அழைப்பிதழை மாத்திரை அட்டை போன்று வடிவமைத்துள்ளனர்.

மருந்தின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் மணமகன்- மணமகள் பெயருடன் திருமண நாளான செப்-5ஐ இணைத்துள்ளனர். மாத்திரை மூலப்பொருட்கள் இருக்க வேண்டிய இடத்தில், திருமண ஜோடியின் பெயரும், அவர்களது கல்வி வேலை விவரங்களையும் குறிப்பிட்டுள்ளனர். மாத்திரை தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் பெற்றோர்களின் பெயர் மற்றும் முகவரியை குறிப்பிட்டுள்ளனர். பக்கவாட்டில் நீலநிற எழுத்தில் திருமண நாள், வரவேற்பு நாள் ஆகிய விவரங்களையும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், எச்சரிக்கை என குறிப்பிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தவறாமல் திருமணத்திற்கு வர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது.

Related Stories: