கோவை காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு ஒன்றிய அரசின் அதிகபட்ச உயர்தர அங்கீகாரம்

கோவை: கோவை காருண்யா நகரில் வேந்தர் டாக்டர் பால் தினகரன் தலைமையில் இயங்கி வரும் காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் உயர்தர அதிகபட்ச அங்கீகாரம் 5 வருடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. காருண்யா பல்கலைக்கழகம் 36 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழங்கி வருகிறது. மாணவ, மாணவிகள் ஆராய்ச்சி செயல்பாடுகள் மேற்கொள்ள தங்கும் வசதிகளோடு அனைத்து வசதிகளுடன் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. தற்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய பாடப்பிரிவுகளான செயற்கை நுண்ணறிவியல், சைபர் செக்யூரிட்டி, டேட்டா சயின்ஸ், மீடியா உள்ளிட்ட பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன.

இவை தேசிய மதிப்பீடு குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் 7 பேர் கொண்ட நிபுணர்கள் குழு கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை காருண்யா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு காருண்யா சமர்ப்பித்த சுய அறிக்கைகளை மதிப்பீடு செய்து, கட்டமைப்பு, ஆய்வகங்கள், கற்றல் வசதிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி கருத்துகளை கேட்டறிந்து அறிக்கையை நிபுணர் குழு சமர்ப்பித்தனர். இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் காருண்யா பல்கலைக்கழகத்திற்கு அதிகபட்ச அங்கீகாரமான A++ வழங்கப்பட்டுள்ளது.

மேலும் காருண்யாவில் போதுமான கட்டமைப்பு, 25 கோடிக்கும் அதிகமான ஆராய்ச்சிகள், 14 புதுமையான திட்டங்கள், 8 தொழிற்துறை நிறுவனங்களோடு இணைப்புகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பலவற்றை இக்கவுன்சில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இக்குழுவினர், மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் ஆதரவுடன் அமைந்துள்ள ஆய்வகங்கள், நானோ மிஷன் ஆதரவுடன் அமைக்கப்பட்ட ஆய்வகங்கள், சூப்பர்சோனிக் மற்றும் சப்சோனிக் விண்வெளி பொறியியல் ஆய்வகங்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு கட்டமைப்புகளை பாராட்டியுள்ளனர். அதிகபட்ச அங்கீகாரம் பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கிய துணைவேந்தர், பதிவாளர்,  இணை, துணை வேந்தர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் குழு, முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், பணியாளர்களை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன், டிரஸ்டி சாமுவேல் தினகரன் ஆகியோர் வாழ்த்தினர்.

Related Stories: