ஒன்றிணைய எடப்பாடி மறுப்பு எதிரொலி ஓபிஎஸ், சசிகலா ரகசிய பேச்சு: தென்மாவட்ட நிர்வாகிகளை முழுமையாக இழுக்க அதிரடி திட்டம்; முன்னாள் அமைச்சர் ஒருவர் இடம் மாற தயாராகி வருவதால் பரபரப்பு

சென்னை: ஒன்றிணைய எடப்பாடி மறுப்பு தெரிவித்ததையடுத்து சசிகலாவுடன் ஓபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக, தென்மாவட்ட நிர்வாகிகளை முழுமையாக இழுக்க அதிரடி திட்டம்  வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் எடப்பாடி அணியில் இருந்து ஓபிஎஸ் பக்கம் தாவ தயாராகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் தீர்ப்பின் மூலமாக அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் கை ஓங்கியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த வெற்றியை அடுத்து மீண்டும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று எடப்பாடிக்கு ஓபிஎஸ் பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். ஆனால் எடப்பாடி அதை நிராகரித்து விட்டார். மேலும் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில் தனக்கு கிடைத்த வெற்றியை சாதமாக்கி கொண்டு அதிமுகவை கைப்பற்றும் முடிவில் ஓபிஎஸ் இறங்கியுள்ளார். இதற்காக சசிகலாவுடன் ஓபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது இணைந்து செயல்படுவோம். கட்சியை நீங்கள் தலைமை ஏற்று நடத்துங்கள். ஆட்சி அமையும் பட்சத்தில் நான் அதற்கு தலைமை ஏற்று நடத்தி  செல்கிறேன். மத்தியில் பாஜ கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் என்றும் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு சசிகலாவும் உடன்பட்டதாக தெரிகிறது. முதற்கட்டமாக, தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரையும் நமது பக்கம் இழுப்போம் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தை தென் மாவட்ட நிர்வாகிகளுடன் தொடங்கியுள்ளது.

அதாவது ஓபிஎஸ், சசிகலா நேரடியாக தென் மாவட்ட நிர்வாகிகளை இழுக்கும் படலத்தில் இறங்கியுள்ளனர். அதே நேரத்தில் தனது சமூக  மக்களை ஒன்றிணைக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு எடப்பாடி பக்கம்  தென் மாவட்டத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் ஒருவர் ஒத்துக்கொண்டதாக  கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் அவர் எடப்பாடி அணியில் இருந்து வெளியேறி ஓபிஎஸ் பக்கம் போவார் என்று கூறப்படுகிறது. மேலும் தென் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் ஓபிஎஸ்சை பற்றி பகிரங்கமாக பேசி வந்தார். ஓபிஎஸ் ரகசியத்தை வெளியிடுவேன். அவர் வெளியில் நடமாட முடியாது என்றும்  எச்சரித்து இருந்தார். அவரும் தற்போது அமைதியாகி உள்ளார். அவரும் ஓபிஎஸ் பக்கம் தாவ உள்ளதாக கூறப்படுகிறது.  

தென்மாவட்ட நிர்வாகிகள் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பிறகு மற்ற மாவட்டங்களிலும் நிர்வாகிகளை இழுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக பக்கா பிளான் தயாராகி வருவதாக  கூறப்படுகிறது. மாவட்ட வாரியாக ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரிந்து சென்ற நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், மேல்முறையீடு வழக்கில் தீர்ப்புக்காக எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார். அதுவரை எந்தவித நடவடிக்கைகளிலும் இறங்க வேண்டாம் என்பதில் எடப்பாடி கறாராக இருந்து வருகிறார்.

இதனால், அதிமுகவை  யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற பரபரப்பு இப்போதே எழுந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு மூலம் தனக்கு கிடைத்த வெற்றியை சாதகமாக்கி, அதிமுகவை கைப்பற்றும் முடிவில் உள்ளார் ஓபிஎஸ். இதற்காக  சசிகலாவுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ‘கட்சியை நீங்கள் தலைமை ஏற்று நடத்துங்கள். ஆட்சி அமையும் பட்சத்தில் நான் அதற்கு தலைமை ஏற்று நடத்தி செல்கிறேன். மத்தியில் பாஜ கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் என்று ஓபிஎஸ் பேசியதாக  கூறப்படுகிறது. இதற்கு சசிகலாவும் உடன்பட்டதாக தெரிகிறது’’

Related Stories: