மின் உற்பத்தியாளர்களுக்கு ரூ.5,085 கோடி பாக்கி மின்சாரம் வாங்க, விற்க 13 மாநிலங்களுக்கு தடை: ஒன்றிய மின் அமைச்சகம் உத்தரவால் மின் விநியோகம் தட்டுப்பாடு அபாயம்

சென்னை: மின் உற்பத்தியாளர்களுகு ரூ.5,085 கோடி பாக்கி வைத்துள்ளதாக கூறி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள், பிற மாநிலங்களுடன் மின்சாரத்தை பகிர்ந்துகொள்ள நேற்று இரவு முதல் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் ஒன்றிய அரசு தலையிடுவதால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் செயல்பட்டு வருகிறது. இதன்கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் (ஜென்கோஸ்) மூலம் மாநிலங்களில் உள்ள மின் வினியோக நிறுவனங்களுக்கு (டிஸ்காம்ஸ்) மின்சாரம் வழங்கப்படுகிறது.

அதன்படி ‘டிஸ்காம்ஸ்’ சார்பில் மின்சார உற்பத்தி நிறுவனங்கங்களுக்கு (ஜென்கோஸ்) பணம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது பல மாநிலங்களில் உள்ள ‘டிஸ்காம்ஸ்’ சார்பில் மின்சாரத்துக்கு பணம் செலுத்தாமல் நிலுவையில்

உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ராஜஸ்தான், மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் ஆகிய மின் வினியோக நிறுவனங்கள் நிலுவைத் தொகையை வைத்துள்ளன.

மேற்கண்ட 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் சார்பில் மொத்தம் ரூ.5,085 கோடி வரை நிலுவை வைத்துள்ளது. இவற்றில் அதிகபட்சமாக தெலங்கானா மாநிலம் ரூ.1,380 கோடி பாக்கி வைத்துள்ளது. அதற்கு அடுத்ததாக தமிழ்நாடு ரூ.926.16 கோடி, கர்நாடகாவில் ரூ.355.2 கோடி, மகாராஷ்டிராவில் ரூ.381.66 கோடி, மத்திய பிரதேசத்தில் ரூ.229.11 கோடி, ராஜஸ்தானில் ரூ.500.66 கோடி, ஆந்திராவில் ரூ.412.69 கோடி, ஜார்கண்டில் ரூ.214.47 கோடி வரை கடன் நிலுவைஉள்ளது.

இந்த நிலையில் புதிய ‘லேட் பேமென்ட் சர்சார்ஜ்’ (எல்பிஎஸ்) என்ற விதிகளின் கீழ் 7 மாதங்களுக்கும் மேலாக ‘டிஸ்காம்ஸ்’களுக்கு நிலுவை தொகையை செலுத்தாமல் இருந்தால், அவை மின்சார வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.

இதனால் கடன் நிலுவை தொகை செலுத்தாத மாநிலங்கள் மின் வர்த்தகத்தில் ஈடுபடுவடுவதற்கு தடை விதிக்க முடியும். அதன்படி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் பிற  மாநிலங்களுடன் மின் விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் ஒன்றிய அரசு தலையிடுவதால், பல மாநிலங்களில்  மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய பவர் இன்ஜினியர்ஸ் ஃபெடரேஷனின் தலைவர் சைலேந்திர துபே கூறுகையில், ‘ பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் புதிய மின்சார சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய மசோதாவானது நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மாநில அரசுகள் மானியம் மூலம் ரூ.76,000 கோடியும், அரசுத் துறைகளின் மின்கட்டணத்தில் ரூ.67,000 கோடியும் செலுத்த வேண்டியுள்ளது. கிட்டத்தட்ட ரூ.1,43,000 கோடியை அந்தந்த மாநில அரசுகள் டிஸ்காம்ஸ்களுக்குச் செலுத்தினால், டிஸ்காம்ஸ்கள் மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகையைச் செலுத்தும்’ என்றார்.

* ஆகஸ்ட் 4ம் தேதியே நிலுவை தொகை தந்துவிட்டோம்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவு: ஒன்றிய அரசின் எரிசக்தி துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி கடந்த 4ம் தேதி அன்றே வழங்கப்பட்டுவிட்டது. ஒன்றிய அரசின் இணையதளத்தில் மின் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான நிலுவைத்தொகையை வெளியிட முடியும். ஆனால் டான்ஜெட்கோ பதில் அளிக்கும் வழிவகை இல்லை. நிறுவனங்கள் குறிப்பிடும் நிலுவைத்தொகை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் அதனை நிறுவனங்கள் பெற்றுக் கொண்டதாக குறிப்பிடவில்லை. சர்ச்சைக்குரிய பட்டியலுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பும், அவகாசமும் இல்லாமல் தன்னிச்சையாக மின் வழங்கலை நிறுத்துவது ஏற்புடையதில்லை. சில காற்றாலை மற்றும் சூரிய ஒளி நிறுவனங்களுக்கு மட்டுமே குறைவான தொகை நிலுவையில் உள்ளது. ஒன்றிய அரசின் மின் தொகுப்பிற்கு ரூ.70 கோடி மட்டுமே செலுத்த வேண்டியுள்ளது. ஓரிரு நாட்களுக்குள் செலுத்தப்படும். ஒன்றிய அரசின் இணையதளத்தில் சரிவர வரவு வைக்கப்படாத காரணத்தால் நிலுவை அதிகமாக காட்டப்படுகிறது. தமிழகத்தில் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் தடை ஏற்பட்டுவிடும் என மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என கூறியுள்ளார்.

* 6 மாநிலத்துக்கு தடை உத்தரவு நள்ளிரவு வாபஸ்

சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தங்கள் தரப்பில் நிலுவை இல்லையென்று ஆவணங்களை சமர்ப்பித்ததால், நேற்று நள்ளிரவு இந்த மாநிலங்களுக்கு மின்சாரம் வாங்க, விற்க விதிக்கப்பட்ட தடையை ஒன்றிய அரசு வாபஸ் வாங்கியது.

Related Stories: