தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமான அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட மார்க்சிஸ்ட் கோரிக்கை

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமான அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய பொதுமக்கள், 2018 மே 22ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் அமைதியான முறையில் முறையிடச் சென்றபோது காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டினால் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து விசாரிப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு 3000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை கடந்த மே 18ம் தேதி தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. ஆனால், இதுவரையில் தமிழக அரசு அந்த அறிக்கையை வெளியிடவில்லை. எனவே, இனியும் கால தாமதம் செய்யாமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக நீதியரசர் அருணா ஜெகதீசன் சமர்ப்பித்துள்ள முழு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்.

Related Stories: