மின்சாரம் வாங்க மின்வாரியத்துக்கு தடை தமிழகத்தில் மின்தடை ஏற்படாமல் தடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சந்தையில் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மின் தடை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.926 கோடியை செலுத்த தவறியதால், மின்சந்தையிலிருந்து மின்சாரம் வாங்கவும், விற்கவும் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு, தனியார் நிறுவனங்களிடம் வாங்குவது தவிர, மின் சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்கி தான், தமிழ்நாட்டின் மின்சார தேவையை மின்வாரியம் சமாளித்து வருகிறது.

தமிழகத்தில் காற்றாலை மின்னுற்பத்தி குறைய தொடங்கியுள்ள நிலையில், மின்சார சந்தையில் மின்சாரத்தை வாங்க முடியாவிட்டால் தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். பொதுமக்களின் வாழ்க்கையை மட்டுமின்றி, தொழில் உற்பத்தி மற்றும் வணிகத்தையும் இது பாதிக்கக் கூடும். மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவையை மின்வாரியம் உடனடியாக செலுத்தி தடையை விலக்கச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசும், மின்சார வாரியமும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: