காவிரி உபரிநீர் திட்டத்தை வலியுறுத்தி அன்புமணி 3 நாள் நடைபயணம்: ஒகேனக்கல்லில் தொடங்கினார்

தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி நேற்று தனது 3 நாள் நடை பயணத்தை தொடங்கினார். ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, பாமக தலைவர் அன்புமணி எம்பி., ஒகேனக்கல் முதல் பொம்மிடி வரை 3 நாள் நடைபயணத்தை நேற்று காலை தொடங்கினார். ஒகேனக்கல் பரிசல் துறை அருகே, நடைபயணத்தை தமிழக விவசாய சங்க மாநில தலைவர் சின்னசாமி தொடங்கி வைத்தார். பாமக கவுரவத் தலைவர் ஜிகே. மணி எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ, முன்னாள் எம்பி டாக்டர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடைபயணத்தின் போது, அன்புமணி, பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் கொடுத்து, காவிரி உபரிநீர் திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்றும் நிலையத்திற்கு சென்று காவிரியை பார்வையிட்டார்.

பின்னர், அன்புமணி எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 35 நாளில், காவிரி ஆற்றில் விநாடிக்கு சுமார் 2.50 லட்சம் கனஅடிக்கும் கூடுதலான தண்ணீர் சென்றுள்ளது. சுமார் 161 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது. அதில் 3 டிஎம்சி தண்ணீரை நீரேற்று முறையில் எடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளை நிரப்பினால், மாவட்டத்தில் நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும். இத்திட்டத்தை செயல்படுத்த சுமார் ரூ.700 முதல் ரூ.800 கோடி மட்டுமே செலவாகும். இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி,10 லட்சத்திற்கும் அதிகமானவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. பின்னர், அவரிடம் நேரில் சென்று பேசிய போது, நிதியில்லை என்ற ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டார். தற்போது உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் இந்த கோரிக்கையை நேரில் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

Related Stories: