×

மதுபான உரிமம் வழங்கிய விவகாரம் டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ ரெய்டு: ஒரே நேரத்தில் 31 இடங்களில் அதிரடி சோதனை

புதுடெல்லி: புதிய கலால் கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சிசோடியா வீட்டில் 12 மணி நேரம் சோதனை நடந்தது. தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியது.  இதன்மூலம், சில்லறை வணிகத்தில் தனியார் மதுபான நிறுவனங்கள் ஈடுபடலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உரிமங்கள் வழங்கப்பட்டன. இந்த புதிய கொள்கை செயல்பாட்டு வந்ததில்  இருந்து பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக காங்கிரஸ், பாஜ  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. இது, கெஜ்ரிவால் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

‘இந்த புதிய கொள்கையில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளது. இதனால், டெல்லி அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,’ என்று கடந்த மாதம் ஆளுநருக்கு டெல்லி தலைமைச் செயலாளர் அறிக்கை சமர்பித்தார். அதில், ஜிஎன்சிடிடி சட்டம் 1991, வர்த்தக விதிகளின் பரிவர்த்தனை சட்டம் - 1993, டெல்லி கலால் சட்டம்-2009 மற்றும் டெல்லி கலால் விதிகள் சட்டம் -2010 ஆகியவற்றில் உள்ள விதிமுறைகள் அனைத்தும் புதிய கொள்கையில் மீறப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையை தொடர்ந்து, புதிய கலால் கொள்கையில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு சிபிஐ.க்கு ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்தார்.

மேலும், தலைமை செயலாளர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் 11 கலால் அதிகாரிகளையும் அவர் பணியிடை நீக்கம் செய்தார். இந்நிலையில், இந்த முறைகேடுகள் தொட்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும், முன்னாள் கலால் ஆணையரும் ஐஏஎஸ் அதிகாரியுமான ஆரவா கோபி கிருஷ்ணா மற்றும் 2 அரசு அதிகாரிகள்  வீட்டிலும் சோதனை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று ஒரே நாளில் 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 31 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை 12 மணி நேரம் நடந்தது. அப்போது, பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. சோதனை நடந்த போது துணை முதல்வர் சிசோடியா வீட்டில் தான் இருந்தார். டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி வருகிறது. வரவேற்கிறேன்: தனது வீடு உள்ளிட்ட 31 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துவதை வரவேற்பதாக துணை முதல்வர் சிசோடியா கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: சிபிஐ  அதிகாரிகளின் இந்த சோதனையால் உண்மை விரைவில் வெளிவரும். அதனால், சிபிஐ அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறேன். சிலர் எங்களுக்கு எதிராக  சதி செய்கிறார்கள்.
அவர்களின் சதிகளால் நான் உடைந்து போகமாட்டேன். டெல்லியில் லட்சக்கணக்கான குழந்தைகளுக்காக தரம் வாய்ந்த பள்ளிகளை உருவாக்கி உள்ளேன். லட்சக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையில் நாங்கள் கொண்டு வந்த புன்னகையே எனது பலம். என்னை உடைப்பதே அவர்கள் நோக்கம். இந்த நாட்டில் நல்ல கல்விக்கான எனது பணியை நிறுத்த முடியாது. நாட்டில் மக்களுக்காக நற்காரியங்களை செய்பவர்களை இப்படி துன்புறுத்துவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

 அதனால்தான், நம் நாட்டை நம்பர் 1 ஆக மாற்ற முடியவில்லை.  இதுவரை என் மீது பல வழக்குகள் உள்ளன. அதில் எந்த தவறுகளும் வெளிவரவில்லை. அதுபோல் இதிலும்  எதுவும் வெளிவர போவதில்லை. கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் டெல்லியில் சிறப்பாகச் செயல்படுவதால் மக்கள் மகிழ்வாக இருக்கிறார்கள். அதனால்தான் டெல்லியின் கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களை கைது செய்து  சிறையில் தள்ள ஒன்றிய அரசு திட்டமிடுகிறது. தற்போது சிறையில் இருக்கும்  சத்யேந்தர் ஜெயின் போல் என்னையும் சிறையில் அடைக்க சிலரின் தூண்டுதலின் பேரில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* சிசோடியாவுக்கு நெருக்கமானவருக்கு மது வியாபாரி கொடுத்த ரூ.1 கோடி
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமானவர் நடத்தி வரும் நிறுவனத்திற்கு மது வியாபாரி ஒருவர் ரூ.1 கோடி கொடுத்ததாக சிபிஐ தனது எப்ஐஆரில் குறிப்பிட்டுள்ளது. புதிய கலால் கொள்கை விவகாரத்தில் சலுவை வழங்கியது, உரிமக்கட்டணத்தை ரத்து செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் சிபிஐ தாக்கல் செய்த எப்ஐஆரில் சுமார் 15 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. அவர்களில் சிசோடியாவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் தினேஷ் அரோராவால் நிர்வகிக்கப்படும் ராதா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இண்டோஸ்பிரிட்ஸின் சமீர் மகேந்திருவிடம் இருந்து ரூ.1 கோடி பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

* அமலாக்கத்துறையும் விசாரிக்க வாய்ப்பு
புதிய  மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையும் விசாரணை நடத்த வாய்ப்பு இருக்கிறது. இது தொடர்பான பல்வேறு ஆவணங்களை அமலாக்கத் துறை ஆய்வு செய்து வருகிறது. அதன் அடிப்படையில், விரைவில் அது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஐ எப்ஐஆர் பட்டியல்
1. மணிஷ் சிசோடியா, டெல்லி துணை முதல்வர்
2. அர்வா கோபி கிருஷ்ணா, கலால் துறை ஆணையர்,
3.ஆனந்த் திவாரி, கலால் துணை துணை ஆணையர்,
4.பங்கஷ் பட்நாகர், உதவி ஆணையர் கலால் துறை,
5.விஜய் நாயர், ‘ஒன்லி மச் லவுடர்’ பொதுபோக்கு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி,
6. பெர்னோட் ரிக்கார்டின் முன்னாள் ஊழியர் மனோஜ் ராய்,
7. பிரிண்ட்கோ ஸ்பிரிட்ஸ் உரிமையாளர் அமந்தீப் தால்,
8. இண்டோஸ்பிரிட்ஸ் உரிமையாளர் சமீர் மகேந்திரு,
9.  பட்டி ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனர் அமித் அரோரா
10.பட்டி ரீடெய்ல் பிரைவேட் நிறுவனம், குருகிராம்
11.  தினேஷ் அரோா, டெல்லி,
12. மகாதேவ் லிக்கர்ஸ், டெல்லி.
13, சன்னி மார்வா, மகாதேவ் லிக்கர்ஸ்,  தெற்கு டெல்லி,
14. அருண் ராமச்நதிரா பிள்ளை, கர்நாடாகா,
15. அர்ஜூன் பாண்டே, குருகிராம்,
16. அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த நபர்களின் பெயர்கள் எப்ஐஆரில் இடம் பற்றுள்ளது.

Tags : Delhi ,Deputy Chief ,Home CPI , Liquor license issue CBI raid at Delhi Deputy Chief Minister's house: 31 simultaneous raids
× RELATED மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு..!!