திருச்சுழி அருகே சேதமடைந்துள்ள சுகாதார நிலையத்தை சீரமைக்க கோரிக்கை

திருச்சுழி: திருச்சுழி அருகே சேதமடைந்த நிலையில் உள்ள சுகாதார நிலையத்தை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழி அருகே உள்ள காளையார்கரிசல்குளம் (மேற்கு) ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஒரு சில வீடுகளில் மட்டுமே கழிவறை உள்ளது. பெரும்பாலான மக்கள் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

காளையார் கரிசல்குளம் மேற்கு ஊராட்சியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுகாதார வளாகம் தற்போது மிகவும் சேதமடைந்து  இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தில் 6 கழிவறைகள் இருந்தும், தற்போது ஒரு கழிவறை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. கட்டிடம் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வயதானவர்கள் என பலரும் சுகாதார வளாகம் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த சுகாதார வளாகத்திற்குள் விஷ ஜந்துகள் அடிக்கடி வருவதால் பொதுமக்கள் இந்த வளாகத்திற்குள் நுழையவே அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்துள்ள இந்த சுகாதார வளாக கட்டிடத்தை முழுமையாக இடித்து அகற்றிவிட்டு, புதிய சுகாதார வளாகம் கட்டி தர வேண்டும் என இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: