காட்பாடியில் இன்று வீடுகளில் குப்பை சேகரிப்பு பணியை கலெக்டர் திடீர் ஆய்வு

வேலூர்: வேலூர் மாநகராட்சி 1வது மண்டலம் காட்பாடி காந்தி நகரில் பொதுமக்கள் மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை வழங்குவதையும், குப்பைகளை தரம் பிரிக்கும் பணியையும் இன்று காலை நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கமிஷனர் அசோக்குமார், 1வது மண்டலக்குழு  தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மண்டல உதவி ஆணையர் செந்தில், சுகாதார அலுவலர் சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த ஆய்வில் ஒவ்வொரு தெருவிலும் வீடுகளில் இருந்து குப்பைகள் சேகரிக்கப்படுவதை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் ஈக்கள் மொய்க்கும் வாய்ப்புள்ள உணவு கழிவுகள், காய்கறி கழிவுகள் என ஈரப்பதமுள்ள குப்பைகளை அன்றைய தினமே காலையிலும், மாலையிலும் வரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். உலர் குப்பைகளான அட்டை பெட்டிகள், பேப்பர்கள், பாட்டில்கள், பேப்பர் கவர்கள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை வாரம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கலாம்.

அல்லது அதற்காக வரும் வியாபாரிகளிடம் கொடுத்து வருவாயும் ஈட்டலாம். இதன் மூலம் மாநகராட்சி பகுதிகளின் சுகாதாரமான சூழலை உறுதிப்படுத்த முடியும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது கலெக்டரிடம் காந்தி நகரை சேர்ந்த பொதுமக்கள், ‘சாலை பணிக்காக ஆங்காங்கே பள்ளம் தோண்டி விட்டுள்ளனர். பணிகளை விரைவாக முடிக்காமல் தாமதப்படுத்துகின்றனர். இதனால் சாலைகளில் நடமாடுவதற்கு சிரமமாக உள்ளது’ என்று புகார் தெரிவித்தனர்.

இதை கேட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி அதிகாரிகளிடம் சாலைப்பணிகளை விரைந்து முடியுங்கள் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து காந்தி நகர் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, ‘காந்தி நகரில் 44 தெருக்களில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.  

எல்லா குப்பைகளையும் ஒன்றாக வழங்குகின்றனர். ஈரப்பதமுள்ள ஈக்கள் மொய்க்கும் குப்பைகளை அன்றைய தினமே காலையிலும், மாலையிலும் மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்கவும், உலர் குப்பைகளான பிளாஸ்டிக், பேப்பர், பேப்பர் கவர், அட்டை பெட்டிகள் போன்றவைகளை வாரம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ என வழங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: