தங்க கடத்தல்காரர்களுக்கு உடந்தை; சுங்க இலாகா சூப்பிரண்டு கைது: தமிழகத்தை சேர்ந்தவர்

திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த தமிழகத்தை சேர்ந்த சுங்க இலாகா சூப்பிரண்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 320 கிராம் தங்கம், 4 பாஸ்போர்ட்டுகள் மற்றும் ரூ.4.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இந்த விமான நிலையங்கள் வழியாகத்தான் இந்தியாவிலேயே பெருமளவு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.

இதைத் தடுப்பதற்காக வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் சுங்க இலாகாவினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றபோதிலும் கடத்தல் குறையவில்லை. பல்வேறு நூதன உத்திகளைக் கையாண்டு தங்கத்தை கடத்தி வருகின்றனர். மேலும் தங்க கடத்தலுக்கு விமான நிலையத்தில் பணிபுரியும் சுங்க இலாகா அதிகாரிகளும் உடந்தையாக செயல்பட்டு வருவதும் தெரியவந்தது. இதுதொடர்பாக இதுவரை சுங்க இலாகாவை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாய், குவைத் அபுதாபி உள்பட வளைகுடா நாடுகளில் இருந்து தங்கத்தை கடத்துவதற்கு ஏராளமான இடைத்தரகர்கள் செயல்பட்டு வருகின்றனர். இங்கிருந்து தங்கத்தை கடத்திக் கொண்டு வந்தால் ஒரு கிலோவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கடத்தல்காரர்கள் கொடுப்பார்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு ஏராளமானோர் இந்த கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று துபாய்-கோழிக்கோடு ஏர் இந்தியா விமானத்தில் வரும் இரண்டு பயணிகள் தங்கத்தை கடத்துவதாக மலப்புரம் மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கரிப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷிபு தலைமையிலான போலீசார் விமான நிலையத்திற்கு வெளியே கடத்தல்காரர்களை பிடிக்க தயாராக காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த சோதனையில் காசர்கோட்டை சேர்ந்த அப்துல் நசீர் (46) மற்றும் ஜம்ஷீர் (20) ஆகிய 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 360 கிராம் தங்கத்தை போலீசார் கைப்பற்றினர். இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது அவர்களது செல்போனில் தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது. போனில் அழைத்தவர்கள் கடத்தல்காரர்களாக இருக்கலாம் என கருதி, போலீசார் அந்த போனை வாங்கி ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அந்த நபரிடம் கூறினர். இதன்படி குறிப்பிட்ட இடத்திற்கு அந்த நபர் வந்தார். அவரிடமிருந்து 320 கிராம் தங்கத்தை கைப்பற்றிய போலீசார் அந்த நபரையும் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் போலீசுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அந்த நபர் கோழிக்கோடு விமான நிலையத்தில் பணிபுரியும் சுங்க இலாகா சூப்பிரண்டு என தெரியவந்தது. பொள்ளாச்சியை சேர்ந்த அவரது பெயர் முனியப்பன் என்றும் தெரியவந்தது. இவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அப்துல் நசீரும், ஜம்ஷீரும் 640 கிராம் தங்கத்தை கடத்திக் கொண்டு வந்துள்ளனர். அதைக் கைப்பற்றிய சூப்பிரண்டு முனியப்பன், 320 கிராமுக்கு அபராதத் தொகையை கட்ட வேண்டும் என்றும், 25 ஆயிரம் ரூபாய் தந்தால் மீதித் தங்கத்தை தான் விமான நிலையத்தை விட்டு வெளியே கொண்டு வந்து தருவதாகவும் கூறியுள்ளார். அதற்கு இருவரும் சம்மதித்துள்ளனர். பின்னர் முனியப்பன் அவர்களது செல்போன் நம்பரை வாங்கி, தான் குறிப்பிடும் இடத்திற்கு வந்து தங்கத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அதன்படி வந்தபோதுதான் போலீசில் சிக்கியுள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் முனியப்பன் கோழிக்கோடு விமான நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார். கடத்தல்காரர்களிடம் இதே போல மிரட்டி பணம் பறிப்பது, பாஸ்போர்ட்டை வாங்கி வைத்து பணத்தை பறிப்பது உட்பட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் தங்கியிருந்த லாட்ஜில் போலீசார் சோதனை நடத்தியதில் 4 பயணிகளின் பாஸ்போர்ட்டுகளும், ரூ.4.5 லட்சம் பணமும், 500 அமீரக திர்ஹாமும் கைப்பற்றப்பட்டன.

விசாரணைக்குப் பின் கரிப்பூர் போலீசார் முனியப்பனை சுங்க இலாகா உயரதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இவருக்கு தங்க கடத்தல்கார்களுடன் உள்ள தொடர்பு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்த்துறை தெரிவித்துள்ளது. விரைவில் முனியப்பன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: