நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: தூங்கிய தாயை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மகன் கைது

தஞ்சை: தாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு, தூங்கிக்கொண்டிருந்த தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே  நடுவிக்கோட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(50). பட்டுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தையல்நாயகி(43). இவர்களுக்கு 2 மகள்கள், கந்தவேல்(23) என்ற ஒரு மகன் உள்ளனர். கந்தவேல், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

கிருஷ்ணமூர்த்தி, மனைவி மற்றும் மகனுடன் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். இவர்களது வீட்டிற்கு தையல்நாயகியின் உறவினர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதற்கு கந்தவேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தாய் மீது கந்தவேல் மிகுந்த ஆத்திரத்தில் இருந்து வந்தார். இதனால் தாய், மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று காலை தையல்நாயகி வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது தனது தாய் மீது கந்தவேல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.  இதில் பலத்த தீக்காயம் அடைந்த தையல்நாயகி அலறியபடி வீட்டை விட்டு வெளியே வந்து துடிதுடித்து உயிருக்கு போராடினார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி தையல்நாயகி பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயை மகனே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: