பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் 2 விசைப்படகுகள் கவிழ்ந்தது: 10 மீனவர்கள் தப்பினர்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் செழியன், சுரேந்தர் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகில் 10 பேர் நேற்று அதிகாலை மீன் பிடிக்க சென்றனர். இதில் ஒரு படகில் 5 பேர் வீதம் 2 படகுகளிலும் 10 பேர் இருந்தனர். மீன்களை பிடித்து கொண்டு பழையாறு துறைமுகத்துக்கு திரும்பி வந்தனர். கொள்ளிடம் ஆறு கடலில் சங்கமிக்கும் இடமான முகத்துவாரத்தின் வழியாக வந்தபோது அங்கு மண் மேடாகியிருந்ததால் தரைதட்டி மண் குவியலில் மோதி 2 படகுகளும் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த 10 பேரை அருகில் இருந்த சக மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.

இதில் செழியனின் விசைப்படகு கடலில் மூழ்கி முழுவதும் சேதமடைந்தது. சக மீனவர்கள் விரைந்து செயல்பட்டு சுரேந்தரின் படகை மீட்டனர். செழியனுக்கு சொந்தமான விசைப்படகு சேதமடைந்ததால் அந்த படகை உடைத்து எடுத்து மீனவர்கள் மீட்டனர்.

இதுகுறித்து பழையாறு கிராம மீனவர்கள் கூறுகையில், கொள்ளிடத்தில் திறந்து விடப்படும் அதிகளவு தண்ணீரால் பழையாறு அருகே ஆறு, கடலில் கலக்கும் இடமான முகத்துவாரம் தூர்ந்து மண்மேடாகி உள்ளது. இதனால் முகத்துவாரத்தில்  படகுகள் கடலுக்குள் செல்லும்போது மண்மேட்டில் மோதி கவிழ்கிறது. எனவே சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பழையாறு முகத்துவாரத்தை தூர்வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: