வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கேரள ராணுவ கேப்டன் சடலம் மீட்பு: மனைவியை பார்த்துவிட்டு திரும்பிய போது சோகம்

போபால்: மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த ராணுவ கேப்டன் நிர்மல் சிவராஜன் சடலம் மூன்று நாட்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த இளம் ராணுவ அதிகாரி கேப்டன் நிர்மல் சிவராஜன் (32), தனது சொந்த குடியிருப்பில் இருந்து பச்மாரிக்கு கடந்த 15ம் தேதி காரில் சென்றார். மீண்டும் பணியில் சேர்வதற்காக சென்ற அவர் திடீரென மாயமானார்.

அன்றைய தினம் அப்பகுதியில் கடுமையான மழை பெய்ததால் தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பாரா? என்ற சந்தேகம் இருந்தது. மலைப்பாங்கான நகரம் என்பதால், அவரை தேடிப் பிடிப்பதில் சிக்கல் நீடித்தது. கடந்த 3 நாட்களாக பேரிடர் மீட்புக் குழுவினர் கேப்டன் நிர்மல் சிவராஜனை தேடி வந்த நிலையில், மலையடிவாரத்தில் உள்ள பாபாய் பகுதியில் அவரது சடலம் ஒதுங்கி இருந்தது.

அதிர்ச்சியடைந்த அவர்கள் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘மிகக் கனமழை பெய்ததால், ஆறுகள் அவற்றின் இயல்பான அளவை விட 10 முதல் 15 அடி உயரத்தில் தண்ணீர் பாய்ந்து ஓடின. அந்த வெள்ளத்தில் சிக்கிய நிர்மல் சிவராஜனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. ஜபல்பூரில் ராணுவ மையத்தில் லெப்டினன்ட்டாக பணியாற்றிய மனைவி கோபிசந்தாவைச் சந்திக்கச் சென்றார்.

ஒரு சில நாட்கள் இருந்துவிட்டு, மீண்டும் பணிக்கு திரும்பிய போது துயர சம்பவம் நடந்துள்ளது. ராணுவக் கல்விப் படை (ஏஇசி) அதிகாரியான நிர்மல் சிவராஜன், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். ராஜஸ்தானின் சூரத்கரில் நியமிக்கப்பட்டார். பச்மாரியில் சிறப்பு பயிற்சி பெற்று வந்தார்’ என்று கூறினர்.

Related Stories: