எனக்கு பொறுப்பு கொடுப்பதில்லை; நான் அமைதியாக இருக்க வேண்டுமாம்!: தெலங்கானா பாஜக மீது நடிகை அதிருப்தி

ஐதராபாத்: எனக்கு பொறுப்பு கொடுக்காமல் நான் அமைதியாக இருக்கவே மாநில தலைமை விரும்புகிறது என்று தெலங்கானாவை சேர்ந்த நடிகை விஜய சாந்தி அதிருப்தியுடன் கூறினார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில்  நடித்த பிரபல நடிகை விஜயசாந்தி, கடந்த 1997ல் பாஜகவில் இணைந்து கட்சியின்  மகளிர் பிரிவு பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். தெலங்கானாவுக்கு தனி  மாநிலம் கோரி நடந்த போராட்டத்தின் போது கடந்த 2005ல் பாஜகவில் இருந்து  விலகி தெலங்கானா என்ற தனி அமைப்பை உருவாக்கினார்.

பின்னர் அவர் தெலங்கானா  ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைந்தார். 2009ம் ஆண்டு மக்களவைக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 2013ம் ஆண்டில் கட்சி விரோத  நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி விஜயசாந்தியை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி  கட்சி இடைநீக்கம் செய்தது. பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்;  தொடர்ந்து 2014 தேர்தலில் மேடக் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு  தோல்வியடைந்தார்.

அதன்பின் நடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில்  தோல்வியடைந்தார். அதன்பிறகு மீண்டும் 2020ல் பாஜகவுக்குத் திரும்பினார். இந்நிலையில் ஐதராபாத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் சர்தார் பாப்பண்ண கவுடுவின் பிறந்தநாளை  முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பேசிய விஜயசாந்தி, ‘நான் அமைதியாக இருக்கவே தெலங்கானா மாநில தலைமை விரும்புகிறது.

எனக்கு ஏதேனும் பொறுப்பு கொடுத்தால் தானே, என்னால் ஏதாவது செய்ய முடியும். எந்தப் பொறுப்பையும் கொடுக்காமல், நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறார்கள் என்பது தெரியவில்லை’ என்றார். தொடர்ந்து நிருபர்கள், ‘உங்களுக்கு ஏன் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது?’ என்று கேட்டனர். அதற்கு அவர், ‘இதனை கட்சித் தலைவர்களிடம் தான் கேட்க வேண்டும்’ என்று அதிருப்தியுடன் கூறினார்.

Related Stories: