17 வயது சிறுமி பலாத்காரம் கடற்படை அதிகாரி கைது

திருவனந்தபுரம்: மனைவி இரண்டாவது பிரசவத்திற்காக ஊருக்கு சென்ற சமயத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கர்ப்பிணியாக்கிய சம்பவத்தில் ராஜஸ்தானை சேர்ந்த கொச்சி கடற்படை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்திலுள்ள பஹ்தூர் பகுதியை சேர்ந்தவர் ஹன்ஸ்ராஜ் (26). கொச்சியில் உள்ள இந்திய கடற்படை ஐஎன்எஸ் கருடாவில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவியும், 10 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளது. கொச்சி கண்ணமாலி பகுதியில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஹன்ஸ்ராஜின் மனைவி இரண்டாவது பிரசவத்திற்காக சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்தார். இதனால் வீட்டில் இவர் மட்டுமே இருந்துள்ளார். ஹன்ஸ்ராஜ் பக்கத்து வீட்டினருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். மனைவி இல்லாததால் சில சமயங்களில் இங்கு சாப்பிடுவதும் உண்டு. இந்நிலையில் இந்த வீட்டிலுள்ள 17 வயது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று அவரை சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு அவரது தாய் அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதித்தபோது சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதில் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக கண்ணமாலி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுமியை கர்ப்பிணியாக்கியது கடற்படை அதிகாரி ஹன்ஸ்ராஜ் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories: