எளாவூர் சோதனைசாவடியில் தனியார் பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது: 4 கிலோ பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: எளாவூர் சோதனைசாவடியில் இன்று காலை போலீசாரின் தீவிர வாகன சோதனையில், ஆந்திராவில் இருந்து வந்த தனியார் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பார்சல் பறிமுதல் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைசாவடி பகுதியில் இன்று காலை எஸ்ஐ மாரிமுத்து தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பயணம் செய்த ஒரு வாலிபர் வைத்திருந்த பார்சல்மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதை பிரித்து பார்த்ததில் 4 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து ஆரம்பாக்கம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த பூமிநாதன் (32) எனத் தெரியவந்தது. மேலும், இவர் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து, சென்னை புறநகர் பகுதிகளில் சில்லறை கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகத் தெரியவந்தது.

இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூமிநாதனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: