அப்போ பல்லாங்குழியானது.... இப்போ பளபளப்பாகுது ரூ.1.35 கோடியில் தார்ச்சாலை பணிகள் ‘படு ஸ்பீடு’: தமிழக அரசிற்கு போடி மக்கள் பாராட்டு

போடி: கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் பெண்கள் மேம்பாட்டிற்காக செய்த விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில் பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது.

தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்க பணிகள், பாதாள சாக்கடை பணிகள், வாறுகால் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் இருந்ததாகவும், தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர். கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் போடி அருேக கீழசொக்கநாதபுரம் விலக்கு பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் துவங்கப்பட்டது. அதேபோல் அப்பகுதியில் சாலை பணிகளும் தீவிரமாக நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து, போடியின் சுற்றுப்பகுதி கிராமங்களில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளும், சாலை சீரமைப்பு பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.

போடி அருகே நாகலாபுரம் கிராம ஊராட்சியில் சுமார் 6000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமம் தேவாரம் நாகலாபுரம் வழியாக வீரபாண்டி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ளது. ஏற்கனவே விரிவாக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் இச்சாலையில் தேவாரம் மற்றும் போடியிலிருந்து தேனி செல்ல அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.

கனரக வாகனங்கள், லாரிகள், ஆட்டோக்கள், விவசாய வாகனங்கள் என அதிகளவிலான போக்குவரத்து உள்ள சாலையாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை, தற்போது பல்லாங்குழி சாலையாக மாறிவிட்டது. இதனால், டூவீலர் ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். எனவே, இப்பகுதியில் புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, தற்போதைய தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து புதிய தார்ச்சாலை அமைக்க உத்தரவிட்டது.

அதன்படி நாகலாபுரத்திலிருந்து பெருமாள் கவுண்டன்பட்டி விலக்கு வரையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேனி கோட்ட பொறியாளர் ரமேஷ், போடி கோட்ட பொறியாளர் தங்கராஜ், உதவி பொறியாளர் நிதீஷ் குமார் ஆகியோர் இப்பணிகளை ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர் 9 மீட்டர் உயரத்திலும் 7 மீட்டர் அகலத்திலும் தரமான முறையில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடப்பதால் தமிழக அரசிற்கு போடி பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

* போடி கீழ்த்தெரு போஜன் பார்க்கிலிருந்து தேனி வரை சாலை விரிவாக்கம் செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அணைக்கரைப்பட்டி விலக்கு பிரிவிலிருந்து தோப்புப்பட்டி வரை சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு, 4 குறுகிய பாலங்கள் அகன்ற பாலங்களாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் சாலையின் நடுவில் விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் விதமாக சென்டர் மீடியன் அமைத்து தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது போஜன் பார்க்கில் இருந்து தோப்புப்பட்டி வரையில் உள்ள சென்டர் மீடியனில் வெள்ளை பெயிண்ட் அடித்து பளிச்சிடும் பட்டைகளும் , சாலை இருபுறங்களிலும் அளவுகோடுகள் வரையப்பட்டு மஞ்சள்,கருப்பு, வெள்ளை, சிவப்பு என கலர் பெயின்டால் மிளிரும் பட்டைகள் தீட்டப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போடியில் இருந்து தேனி செல்கின்ற வாகனங்களும் தேனியிலிருந்து போடி வருகின்ற அனைத்து வாகனங்களும் அவரவர் பாதைகளில் கவனமாக பயணிக்கவும், விபத்துகளை தடுக்கும் விதமாக செல்லும் வகையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: