உக்ரைனில் செப்டம்பர் முதல் நேரடி வகுப்பு தொடக்கம்: வகுப்புகளில் பங்கேற்க இந்திய மாணவர்களுக்கு அழைப்பு...

கீவ்: உக்ரைனில் போர் எதிரொலியாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகளை தொடங்க முடிவு செய்து இருப்பதால், அங்கிருந்து நாடு திருப்பிய இந்திய மாணவர்கள் கவலையடைந்துள்ளனர். போருக்கு இடையே உக்ரைனில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் சுமார் 20,000 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள். இரு நாடுகளிடையேயான போர் சுமார் 6 மாதமாக நீடித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. நாடு திருப்பிய மாணவர்களுக்கு இந்திய மருத்துவ கல்லூரிகளில் படிப்பினை தொடர விடுக்கப்பட்ட கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்கவில்லை.

 இந்நிலையில் உக்ரைனில் உள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகளை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளன. மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளை அக்டோபரில் நேரடியாகவும் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவர்களுக்கு உக்ரைன் கல்வி நிறுவனங்கள் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. ஆனால், உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் உக்ரமாக நடந்து வருவதால் தங்கள் பாதுகாப்பு குறித்து இந்திய மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதேபோல், உக்ரைன் திரும்பா விட்டால் கல்வி பாழாகி விடும் என்று கூறுகின்றனர். இதன் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் தவித்து வருவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: