பலகோடி செலவழித்தும் முட்புதர்கள் சூழ்ந்து காடுபோல காட்சி அளிக்கிறது; பயன்பாட்டிற்கு வராமல் பாழாகும் வேலூர் விமான நிலையம்: முடங்கி கிடக்கும் திட்ட பணிகளால் பொதுமக்கள் அதிருப்தி

வேலூர்: வேலூர் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வராமல் முட்புதர்கள் சூழ்ந்து காடு போல காட்சி அளிப்பதால் பழாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையத்தை பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மொத்தம் உள்ள 120 ஏக்கர் பரப்பளவில் முதற்கட்டமாக 32.52 கோடியில் மேம்படுத்தி சிறிய ரக விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக வேலூர் விமான நிலையத்தில் டெர்மினல் பில்டிங், 800 மீட்டர் ரன்வே, வாகன நிறுத்துமிடம், விமான நிலைய கட்டிடங்கள், துணை கட்டிடங்கள், மின்சார கட்டிட பணிகள் 95 சதவீதம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இப்பணிகளை முடித்து சுற்றுச்சுவர் கட்டவும், ரன்வேயை விரிவுபடுத்தவும் விமான நிலையத்தின் நடுப்பகுதியில் அப்துல்லாபுரம்- தார்வழி சாலை வருவதால் அந்த சாலை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பதிலாக விமான நிலையத்தை சுற்றி புதிய சாலையை ரூ.1.15 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக விரிவாக்கப்பணிக்காக விமான நிலையத்தின் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் இடத்தை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நிலத்தின் உரிமையாளரிடம் பேசப்பட்டுள்ளது.

அவரும் நிலத்தை வழங்குவதாக இசைவு தெரிவித்தார். இதையடுத்து அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. அந்த இடத்தில் மரங்கள், பெரிய சுற்றுச்சுவர் போன்றவை உள்ளது. இதனால் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டது. முதற்கட்டமாக மொத்தம் ரூ.20 கோடி வழங்க திட்டமதிப்பீடு செய்யும் பணி நடத்தப்பட்டது. ஆனால் அருகில் உள்ள மற்றொரு இடத்திற்கு அதிகளவில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதே அளவு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனால் மாவட்ட அளவில் மறுமதிப்பீடு செய்யும் குழு கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. இதைடுத்து மாநில அளவிலான மறுமதிப்பீட்டு குழு கூட்டம் நடத்தப்பட்டது. விமான போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை இறுதிமுடிவு எடுக்கவில்லை. இதனால் விமான நிலைய திட்டப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. இது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

பல ஆண்டுகளாக வேலூருக்கு விமான நிலையம் வர வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் ஏக்கத்தில் இருந்தனர். அதனை நிவர்த்தி செய்யும் வகையில் அதற்கான பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிந்து ஒரு ஆண்டுக்குள் விமானம் பறக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகள் கடந்தும் இதுவரை விமானம் பறக்கவில்லை. இந்த விமான நிலையத்திற்கு தேவையான கூடுதல் இடத்தை வாங்க ஒன்றிய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விமான நிலையம் பயன்பாட்டிற்கு வராமலேயே பழாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் முகப்தோற்றம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள் காடுகள் போல முட்புதர்கள் முளைத்துள்ளது. மேலும் ரன்வே முழுவதும் புற்கள் முளைத்துள்ளது. விமான நிலையம் என்ற தோற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக திட்டப்பணிகள் நடக்கவில்லை. இதனால் இந்த விமான நிலையம் கைவிடப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த வேலூருக்கு விமான நிலையம் கொண்டுவர மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முக்கியத்துவம் கொடுக்காத விமான போக்குவரத்து துறை வேலூரில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சரியாக 5 கிலோமீட்டர் தொலைவில் அப்துல்லாபுரம் பகுதியில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் இருந்து 51 ஏக்கர் பரப்பளவில் விமான ஓடுதளம் இருந்து வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு பிறகு சிறிது காலம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த இந்த வானூர்தித் தடம், 2006ம் ஆண்டு ஜூலை மாதம் மதராசு பிளையிங் கிளப்பின் பயிற்சி விமானிகளுக்காக மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. அடுத்த 5 ஆண்டுகள் மதராசு பிளையிங் கிளப் கட்டுப்பாட்டில் இருந்த இந்த வானூர்தி தடம் 2011ஆம் ஆண்டில் பயன்பாடு ஏதும் இல்லாமல் மீண்டும் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் தான் கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய அரசின் உதான்- பிராந்திய இணைப்பு  திட்டத்தின் கீழ் அப்துல்லாபுரத்தில் இருக்கும் வானூர்தி தடத்தை 20 பயணிகள் வரை அமர்ந்து பயணம் செய்யக்கூடிய சிறிய வகை விமானங்களுக்கான, விமான நிலையமாக விரிவாக்கம் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டு தொடங்கியது. பணிகள் முதலில் விறுவிறுப்பாக நடந்தது. அதன்பிறகு அப்படியே முடங்கியது. பெயரளவில் மட்டுமே விமான நிலையம் பணிகள் நடந்து வருகிறது. பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்காமல் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பொதுமக்களின் நீண்ட நாள் கனவான விமான நிலைய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Related Stories: