×

மகாராஷ்டிராவில் ஏகே 47 துப்பாக்கி, குண்டுகளுடன் கரை ஒதுங்கிய படகு தீவிரவாதிகள் நுழைந்து விட்டதாக பீதி

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த தீவிரவாதிகள், மும்பையில் நடத்திய தாக்குதலில் ஏராளாமானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இந்த மாநிலத்தில் ராய்கட் கடற்கரைக்கு அருகில் உள்ள ஸ்ரீவர்தன் பகுதியில் நேற்று சந்தேகத்துக்கு  இடமாக ஒரு நவீன படகு நின்றது. இதை பார்த்து மக்கள் அதிர்ந்தனர். படகில் யாரும் இல்லாததால் சந்தேகம் அடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ராய்கட் போலீஸ் எஸ்பி அசோக் துதே உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று, படகில் சோதனை நடத்தினர். அதில் இருந்த பெட்டியில் ஏகே 47 ரக துப்பாக்கிகள் மூன்றும், அதற்கு பயன்படுத்தும் தோட்டாக்களும் இருந்தை கண்டு அதிர்ந்தனர். சுதந்திர தினத்தை சீர்குலைப்பதற்காக வெளிநாட்டு தீவிரவாதிகள் யாராவது வந்து, அப்பகுதியில் ஊடுருவி இருக்கிறார்களா என்று சந்தேகம் எழுந்தது.

உடனே, விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், இந்த படகு மோசமான வானிலை காரணமாக கைவிடப்பட்டு இங்கு வந்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘இங்கிலாந்து பதிவு செய்யப்பட்ட இந்த படகு, ஆஸ்திரேலிய பெண்ணுக்கு சொந்தமானது. ஓமனில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும்போது, கடந்த ஜூன் 26ம் தேதி மோசமான வானிலை காரணமாக படகில் இருந்தவர்கள் உதவி கோரினர். மஸ்கட் அருகே அவர்களை கடற்படையினர் மீட்டனர். கைவிடப்பட்ட இந்த படகு, இங்கு வந்து கரை ஒதுங்கியுள்ளது. படகு சேதமடைந்து உள்ளது,’என்று தெரிவித்தனர்.
இருப்பினும், படகுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

Tags : Maharashtra , Panic that terrorists have entered Maharashtra with AK 47 guns and bombs
× RELATED என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி