ஜம்மு காஷ்மீரில் டிரோனில் வந்த வெடிபொருட்கள்; தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு: பாகிஸ்தானில்  இருந்து தீவிரவாதிகள் டிரோன் மூலம் அனுப்பிய வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான். இது குறித்து ஜம்மு காஷ்மீர் போலீசார் கூறுகையில்,‘‘ஜம்முவின் ஆர்னியா பகுதியில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி டிரோன் மூலம் வெடிபொருட்கள் போடப்பட்ட வழக்கில் போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து ஒரு தீவிரவாதியிடம் நடத்திய விசாரணையின் போது, ஒரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி  முகமது அலி உசைன் என்ற காசிமுக்கு இதில் தொடர்பு உள்ளது தெரிந்தது.

இதையடுத்து, சர்வதேச எல்லையில் உள்ள டோப் என்ற கிராமத்துக்கு முகமது அலியை அழைத்து சென்று விசாரித்தபோது, அங்கு டிரோனில் வந்த வெடிபொருள் பார்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது, போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பிடுங்கி தாக்குதல் நடத்த  தீவிரவாதி முயற்சித்தான். இதையடுத்து, வீரர்கள் அவனை சுட்டுக் கொன்றனர். டிரோனில் போடப்பட்ட பார்சலில் ஏகே 47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி, 2 கையெறி குண்டுகள் உள்ளிட்டவை இருந்தன. அவை பறிமுதல் செய்யப்பட்டது,’’என்றனர்.

Related Stories: